தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!? குமறும் ஊழியர்கள்!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 1 லட்சம் பேருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு 5 கட்டங்களாக நீடித்து வருகிறது.
எனினும், இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்கள் உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மாவட்டங்களில் தான் தமிழகத்தின் 80 சதவிகித கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காரணமாக சென்னையில் வசித்த மக்களில் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊர்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், ஐ.டி. நிறுவன ஊழியர்களும் வேலை இழக்க துவங்கியுள்ளனர்.
இது குறித்து ஐ.டி.ஊழியர்கள் சங்க நிர்வாகி வசுமதி கூறுகையில், "ஐ.டி. நிறுவனங்களை பொறுத்தமட்டில் 10 முதல் 5000 நபர்கள் வரை பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவனங்களின் பிராஜெக்ட் மற்றும் அது சார்ந்த வேலை வாய்ப்புகள் அமையும்.
சிறிய நிறுவனங்களுக்கு 1 அல்லது 2 மாத பிராஜெக்ட் தான் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகால பிராஜெக்ட் கூட கிடைக்கும்.
இப்போது, இந்த ஊரடங்கு காரணமாக சிறிய, பெரிய நிறுவனங்கள் அனைத்துமே கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வீட்டிலிருந்தே பணி செய்ய அரசு அறிவுறுத்திய காரணத்தால், அனைத்து நிறுவனங்களும் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்றத் துவங்கின.
ஊரடங்கு ஓரிரு மாதங்கள் எனில், வீட்டிலிருந்து பணி செய்வது பயனளிக்கும். தமிழகத்தில் கொரோனா பரவல் துவங்கி தற்போது வரை மூன்று மாதங்கள் கடந்து விட்டன.
இயல்பு நிலை திரும்ப மேலும் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தான் ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன" என்றார்.
மேலும், "பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாத பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை கொடுத்து பணி நீக்கம் செய்து வருகின்றன. சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், பணி நீக்கம் செய்யாதீர்கள் என்று பல நிறுவனங்களிடம் முறையிட்டும் பலனில்லை. இதனால் பல ஊழியர்கள் விவசாயம் உள்ளிட்ட சொந்த தொழில்களை துவங்கும் முடிவில் சொந்த ஊர்களுக்கு செல்வதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளால் மொத்தமாக 1 லட்சம் பணியாளர்கள் வரை வேலை இழக்கும் அபாயம் உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.டி.துறையில் 15 வருடதிற்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட தினேஷ் தற்போது வேலை இழந்து தவிக்கிறார். அவர் கூறுகையில்,"என்னுடைய 37,000 ரூபாய் சம்பளத்தை வைத்து தான் 20,000 ரூபாய் பெர்சனல் லோன், இதய நோய் பாதிப்பு உள்ள என் அப்பா, படிக்கும் இரு மகன்கள், மனைவி ஆகியோருடன் குடும்பம் நடத்தி வருகிறேன்.
தற்போது, ஊரடங்கு காரணமாக என்னுடைய நிறுவனம் (பெயர் சொல்ல விரும்பவில்லை) என்னை பணி நீக்கம் செய்துவிட்டது. பணி நீக்க சான்றிதழில் "Terminate" என்று குறிப்பிட்டு உள்ளார்கள். டெர்மினேட் என்றால் என்மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இருக்க வேண்டும். ஆனால், நான் வேலை இழப்பதற்கு ஊரடங்கு தானே காரணம்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும்,"ஒன்றரை மாதத்திற்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டேன்.இரண்டு மாத சம்பளமாவது கொடுங்கள் என்று கேட்டும் நிர்வாகம் கொடுக்கவில்லை. தற்போது, கையிருப்பு முழுவதும் செலவாகி விட்டது.
இனி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சரி, சொந்தமாக கடை அல்லது வேறு ஏதாவது தொழில் துவங்கலாம் என்றால் கூட முதலுக்கு வழியில்லை. இனி வரும் 6 மாதங்களை எப்படி நகர்த்தப் போகிறேன் என்று நினைக்க, நினைக்க மன உளைச்சல் தான் அதிகரிக்கிறது." என்றார்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது, அவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அரசுகள் வழங்கினாலும், அது எதையும் நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள் முன்னால் ஐ.டி. ஊழியர்கள்.
நன்றி: News 18 tamil

மற்ற செய்திகள்
