தமிழகத்தின் 16-வது 'எதிர்க்கட்சி தலைவர்' தேர்வு...! '3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டம்...' - அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ள அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 7-ம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டது.
இந்த நிலையில் இக்கூட்டம் இன்றைக்கு (10-05-2021) ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை மாநகர காவல் துறையினரிடம் அதிமுகவினர் அனுமதி பெற்றனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தமிழக சட்டமன்ற செயலாளரிடம் அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கியுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் முடிவு குறித்து ஓ.பி.எஸ் மகிழ்ச்சியடையவில்லை என்றும், ஆயினும் அவர் தொடர்ந்து கட்சியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு.
GET READY TO FACE 🔥🔥💥 pic.twitter.com/XcuoKYpPuj
— அஇஅதிமுக (@ADMKofficial) May 10, 2021