'10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக'... எதிர்க்கட்சித் தலைவர் யார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா? அல்லது புதிதாகக் கூடி புதிய தலைவரை அமர்த்துவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. திமுக கூட்டணி 156 இடங்களையும், திமுக தனியாக 124 இடங்களையும் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அதன் தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணி 78 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுக மட்டும் 68 இடங்களைப் பெற்றுள்ளது. இதனால் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.
அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா? அல்லது ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து அதிமுக தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அந்தஸ்துள்ள பதவி ஆகும். எனவே யார் எதிர்க்கட்சி பதவியைப் பிடிக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.