'கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய் பிரச்சாரம்'... 'மக்களின் ஆதரவு நமக்கு எப்போதும் இருக்கு'... அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 31, 2021 07:13 PM

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வருவதால், மக்கள் தங்களின் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

EPS and OPS writes letter to AIADMK party members

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுக தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் :

"எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தேர்தல் களத்தில் கண்ட தொடர் வெற்றிகளைப் போன்றதொரு, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை அதிமுகவும், அதன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் பெற்றிட வேண்டும் என்பதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அயராது பாடுபட்டு வரும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், அர்ப்பணிப்புக்கும் எப்படி நன்றி கூறுவது, என்ன வார்த்தைகளால் பாராட்டி மகிழ்வது என்று திகைத்துப் போயிருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று நாங்கள் இருவரும் தேர்தல் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடமெல்லாம் உற்சாகத்துடன் நீங்கள் ஆற்றும் பணிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறோம். பேரார்வத்துடன் பல்லாயிரக்கணக்கில் கூடி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம் பெண்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் எங்களை வரவேற்கும் காட்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.

'தொண்டர்களின் உழைப்பையும், தமிழ்நாட்டு வாக்காளர்களின் வாஞ்சை மிகு வரவேற்பையும் கண்டு மகிழ ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லாமல் போய்விட்டாரே' என்ற ஏக்கம்தான் எங்களுக்குள் ஏற்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது' என்று ஆரூடம் சொன்னவர்களும், 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு நாள் தாங்குமா?, ஒரு வாரம் ஓடுமா?, இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும்;

EPS and OPS writes letter to AIADMK party members

ஆறு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; தீபாவளிக்குள் போய்விடும்' என்றெல்லாம் ஆரூடம் கூறியவர்களின் மனக்கோட்டைகளைத் தகர்த்தெறிந்து, அவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை மக்களுக்கு நாம் கொடுத்துள்ளோம். தற்போது தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.

அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. மூன்று புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப்பெருக்கு; பருவம் தவறிப் பெய்த பேய் மழை, கடுமையான ஒரு வறட்சிக் காலம் என்ற இயற்கைப் பேரிடர்கள் அனைத்தையும் வெற்றிகரமாகச் சமாளித்து நிவாரணப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டோம். தமிழக மக்களின் இன்னல்களைக் களைந்தோம்.

உலகமே அஞ்சி நடுங்கி, செயலிழந்து, முடங்கிக் கிடக்கும் கொடிய கரோனா பெருந்தொற்று நோயைச் சமாளித்து, போராடி, மக்களுக்கு இயன்ற வகைகளில் எல்லாம் உதவி செய்து, இன்று அனைவருக்கும் கரோனா தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.

எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு அதிமுக அரசு வரலாற்றில் இடம்பெறும் அரசாகத் திகழ்கிறது. நாம் ஆற்றாத வளர்ச்சிப் பணிகள் உண்டா? மக்களுக்கு நாம் செய்யாத தொண்டு ஏதும் உள்ளதா?

நன்றி உணர்ச்சி மிக்க நம் தமிழக மக்கள் 2011 முதல் அதிமுக அரசு ஆற்றி வரும் அரும் பணிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், 2016-ல் தொடர் வெற்றியை அளித்தது போல, இப்பொழுதும் ஒரு மகத்தான வெற்றியை நமக்குத் தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை எங்களுடைய தேர்தல் பிரச்சாரப் பயணங்களில் நாங்கள் சந்திக்கும் மக்கள் கூட்டமும், அதன் எழுச்சியும் எடுத்துக்காட்டுகிறது.

நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை, எங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்த்துகிறது. பல்வேறு வல்லுநர்கள், பொதுமக்கள் மூலம் எங்களுக்கு வருகின்ற தகவல்கள், அதிமுகவின் மீது மக்கள் பேரன்பு கொண்டிருப்பதையும், அந்தப் பேரன்பு அரசியல் ஆதரவாக மாறி வாக்குகளாகப் பொழியப் போகிறது என்றே கூறுகின்றன.

பத்திரிகைகளும், ஊடகங்களும் பரபரப்புக்காகவும், தங்கள் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பைக் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளா? கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போயின என்பதை நாம் எல்லோரும் அறிவோம் தானே?

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தேர்தல் களம் கண்ட காலங்களில் கூட, கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள் மக்களின் தேர்தல் தீர்ப்புகளின் முன், முனை மழுங்கிப் போயின என்பதைத் தமிழ்நாடு நன்கு அறியும். இப்போது, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மை இந்த பொய்ப் பிரச்சாரங்களும், கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும்?

தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் அதிமுகவினர் அனைவரும், கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம். வெற்றி மாலையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்" இவ்வாறு ஓபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. EPS and OPS writes letter to AIADMK party members | Tamil Nadu News.