'ஒரு லெமன் 59,000 ரூபாய்...' அப்படி என்ன ஸ்பெஷல்...? இந்த எலுமிச்சைப்பழத்தை சாப்பிட்டால் 'அது' நடக்குமாம்...! - போட்டி போட்டு ஏலம் எடுத்த மக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்5 ரூபாய்க்கு விற்கும் எலுமிச்சைப்பழம் கோவில் பூஜைக்கு பின் 50 ஆயிரத்திற்கு அதிகமாக ஏலம் போன சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.
பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் இறைவனுக்கு படைக்கப்படும் உடைகள் மற்றும் பொருட்கள் பொதுமக்களுக்கு ஏலம் விட்டு கொடுக்கப்படும். அப்படி ஒரு நிகழ்வு தான் விழுப்புரத்தில் நடந்துள்ளது.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்று மீது பழைமையான ரத்தினவேல் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சின்ன மயிலம் என்றும், இரட்டை குன்று முருகன் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்தக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும்.
அதன்படி இந்த வருடமும் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பங்குனி திருவிழா. 11நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, வீதியுலா திருக்கல்யாணம் தோ்த் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றன.
அதன்படி, முதல் நாள் முதல் ஒன்பதாவது நாள் வரை தினமும் கோயிலில் உள்ள வேல் மீது ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை செய்யப்படும். அந்த எலுமிச்சை பழம் 11-ஆம் நாள் இரவு ஏலம் விடப்படும். இவ்வாறு பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்களும் மாா்ச் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு ஏலம் விடப்பட்டன.
இந்த பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்களை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியா் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் பெறுவாா்கள் என்பது, மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த எலுமிச்சைப் பழங்களை ஏலம் எடுக்க பல்வேறு ஊா்களில் இருந்தும் திரளானோா் பங்கேற்றனா். மொத்தமாக 9 எலுமிச்சை பழங்களும் மொத்தமாக ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 900க்கு ஏலம் போயுள்ளது.
முதல் நாள் பழத்தை கடலூா் கூத்தப்பாக்கம், நாராயணன்-வளா்மதி தம்பதியினா் ரூ.59ஆயிரத்துக்கும், இரண்டாம் நாள் பழம் ரூ.19 ஆயிரத்துக்கும், மூன்றாம் நாள் பழம், ரூ.25 ஆயிரத்துக்கும், நான்காம் நாள் பழம் ரூ.14,500-க்கும் ஏலம் போகியுள்ளது.
ஐந்தாம் நாள் பழம் ரூ.11 ஆயிரத்துக்கும், ஆறாம் நாள் பழம் ரூ.23,00-க்கும், ஏழாம் நாள் பழம் ரூ.5 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. எட்டாம் நாள் பழம் ரூ.4,200-க்கும், ஒன்பதாம் நாள் பழம் ரூ.3,900-க்கும் ஏலம் போனது. இதன்படி, 9 எலுமிச்சை பழங்களும் மொத்தமாக ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 900-க்கு ஏலம் போனது.