'சென்னை மக்களே ஓட்டு போடும்போது இத மட்டும் மறக்காதீங்க'... பரப்புரையில் முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாகச் சென்னை விளங்குவதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது சட்டம் ஒழுங்கில் தமிழகத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மாற்றியுள்ளதாகப் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய முதல்வர், ''தி.மு.க தலைவர் ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம், நமது அரசைப்பற்றியும், கட்சியைப் பற்றியும், கூட்டணி கட்சியினரைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்த வரையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் செய்த சாதனைகளையும், அதற்குப் பின்னால் அம்மாவின் அரசு செய்துள்ள சாதனைகள், நன்மைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வருகின்றோம். தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் தான் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, நில அபகரிப்பு, கூலிப்படை என்று அமைதி இழந்து தமிழகம் இருந்தது.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், அமைதி தவழும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியா டுடே என்னும் ஆங்கில இதழ் நாடு முழுவதும் ஆய்வு செய்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனத் தேர்வு செய்து விருது வழங்கியது. அந்த விருதினை துணை ஜனாதிபதியிடமிருந்து நானே நேரில் பெற்று வந்தேன். இது அம்மாவின் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்குக் கிடைத்த விருது. அதே போல, பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநகரம் சென்னை என்றும் தேர்வுசெய்யப்பட்டு விருது பெற்றுள்ளோம்.
சென்னை மாநகரத்தில் மட்டும் மழை நீர் கால்வாய் 954 கிலோ மீட்டர் நீளச் சாலைகளுக்குக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 3000 இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது 33 இடங்களில் தான் தண்ணீர் தேங்கக் கூடிய நிலை இருக்கிறது. அதையும் வெளியேற்றுவதற்கு அம்மாவுடைய அரசுத் திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
மழை மற்றும் புயல் வந்தாலும் மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு பூமிக்கு அடியில் மின் பாதை அமைத்து கேபிள் மூலம் மின்சாரம் கொடுக்கின்றோம். மேலும் 8 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் லைசென்ஸ் வழங்கப்படும். மாதந்தோறும் எல்லா அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1,500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சொந்தமாக புதிய ஆட்டோக்களை வாங்குவதற்கு 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். சென்னை மாநகரத்தில் வீடில்லாத ஏழை மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இவை அனைத்தும் அம்மாவின் அரசு மீண்டும் அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்'' என முதல்வர் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
