'ஜெயிக்கப்போவது 'அதிமுக'வா இல்லை 'திமுக'வா?... '2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 21, 2019 01:01 PM
காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாக்குமரி தொகுதியில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி கலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதோடு விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதியும் கலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் இரு தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என அரசியல் காட்சிகள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இரு தொகுதிகளுக்குமான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, திமுக கொடுக்குமா? அல்லது தானே போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நாங்குனேரி மற்றும் விக்ரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
