'MIDNIGHT பிரியாணி சாப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுற மக்களே'... 'பெரிய ஆபத்தை தொட்டுட்டீங்க'... எச்சரிக்கை தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும் பழக்கம் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஹோட்டல் துறையின் வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் பெரும் நகரங்களில் மக்களின் வேகமான வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் விதமாக 24 மணி நேரமும் திறந்திருக்கும் உணவகங்களும் தற்போது பெருகிவிட்டது. அதிலும் குறிப்பாக நள்ளிரவு பிரியாணி, அதிகாலை 4 மணி பிரியாணி, காலை 6 மணி பிரியாணி எனப் பலரும் பல விதங்களில் பிரியாணியை டேஸ்ட் செய்து வருகிறார்கள்.
நண்பர்களோடு நள்ளிரவோ, அதிகாலை 4 மணிக்கோ பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணியைச் சுவைத்து விட்டு, அங்கே ஒரு செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக தட்டி விடுவது என்பது பல இளசுகளின் வழக்கமான நடைமுறையாகவும். இது என்றாவது ஒரு நாள் நடந்தால் பரவாயில்லை, ஆனால் இதையே ஒரு பழக்கமாக்கிக் கொண்டால் அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது எனக் கூறுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
தற்போதைய வேகமான காலசூழலில் பலரும் கணினி சார்ந்த வேலைகள் அல்லது அதிகம் உடல் உழைப்பு இல்லாத பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பணிகளையே செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் நிறைய ஓட்டல்கள் இயங்குகின்றன. அதிகாலை 3 மணிக்குக் கூட, சூடான பிரியாணி கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாகப் பரிமாறப்படுகின்றன.
பிரியாணி மட்டுமல்ல, சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன. அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகப்படியான ஐ.டி.ஊழியர்களைப் பார்க்கமுடிகிறது. இதையே அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டால் ஆபத்தை அவர்களே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் செயல் என்பதே மருத்துவர்களின் கவலையாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறுவது, ''நள்ளிரவில் சாப்பிடும் பிரியாணியில் உள்ள இறைச்சி, பிரியாணிக்குச் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை நாளடைவில் குடல் உபாதைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். சாதாரண செரிமான பிரச்சனை என்று நினைக்க வேண்டாம், அதுவே புற்றுநோயில் கொண்டு விடும் அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற பகீர் தகவலையும் தெரிவிக்கிறார்கள்.
அதிலும் நள்ளிரவு பிரியாணிக்குக் குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஓட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்திப் பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் எனப் பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள். அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளைத் தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.
மேலும் நள்ளிரவில் பிரியாணி மட்டுமின்றி, பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, பரோட்டா மற்றும் சோடா பானங்களையும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தீர்க்கமாகக் கூறியுள்ளார்கள். எப்போதுமே இரவில் ஆவியில் வெந்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை எடுப்பதே சிறந்தது என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
என்றாவது ஒரு நாள் நண்பர்களோடு ஜாலியாக சென்று நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது என்பது தவறல்ல. ஆனால் அதுவே தினசரி பழக்கமாக மாறினால், பெரும் ஆபத்தில் போய் முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.