'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கிற்கு பின் மீண்டும் வேலைக்குச் செல்வதில் 93% ஊழியர்களுக்கு தயக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பிறகு 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பலர் வேலையின்றி வருமானத்தை இழந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள வேளையில், சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு சில துறைகளில் மட்டும் சில கட்டுப்பாடுகளோடு அலுவலங்கள் இயங்க அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் 93% ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வதில் மன அழுத்தத்துடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மைண்ட் மேப் நிறுவனம் சார்பாக ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேலை பார்க்கும் அலுவலகத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டுமென 85% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 560 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஊரடங்கிற்கு பின் மீண்டும் வேலைக்குச் செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் கொரோனா பயமும் இருப்பதால் வேலைக்குச் செல்லத் தயக்கம் இருப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கிற்கு பின்னும் சில காலம் வீட்டிலிருந்தே வேலை பார்க்க விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
