'கர்ப்பம்னு நம்ப வச்சாச்சு...' 'வயிறு பெருசாகலையே...' குழந்தை எங்கன்னு கேட்டா என்ன பண்றது...? 'அதற்காக போடப்பட்ட திட்டம்...' - பெண்ணின் உருக்கமான வாக்குமூலம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் விசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்- பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு இரு தினங்ககளுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த தினத்தில் மாலை நான்கு மணியளவில் ஒரு பெண் அந்தக் குழந்தையை மணிகண்டனின் தாய் மருத்துவமனையில் உள்ள கோவிலில் வைத்து வழிபட கேட்பதாக கூறி அறிமுகமில்லாத பெண் ஒருவர் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை வாங்கிக்கொண்டு சென்ற பெண் மருத்துவமனையில் இருந்து வெளியேறி விடவே, பதற்றமடைந்த பாக்கியலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் அருகில் விசாரித்தனர். மருத்துவமனை பக்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்ததில் ஒரு தகவல் கிடைத்தது. அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறி கடலூர் பேருந்து நிலையத்துக்கு சென்றதாக தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக அந்த பெண்ணை தேடி வந்தனர்.
தீவிர விசாரணையில் கடலூரை அடுத்துள்ள டி. குமாரபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் மனைவி நர்மதா என்பவர் தான் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நர்மதாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர். குழந்தை கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்தில் மீட்கப்பட்டு விட்டது.
காவல் துறையினரின் விசாரணையில் நர்மதா கூறியதாவது, '' நானும் சிலம்பரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இரண்டு முறை கர்ப்பமாகியும் கரு கலைந்து விட்டது. இதனால், நானும் என் கணவரும் மிகுந்த மன வேதனையில் இருந்தோம். ஆனால், கர்ப்பம் கலைந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. இதனால், குடும்பத்தாரை மகிழ்ச்சியில் இருக்க வைக்க நான் கர்ப்பமாக உள்ளதாக நடிக்க தொடங்கினேன். வீட்டிலுள்ளவர்களும் என் கணவரும் நம்பி விட்டனர். தொடர்ந்து, 5 வது மாதம் எனக்கு சீரும், சடங்குங்களும் செய்தனர். பின்னர், பாகூருக்கு சென்று வசித்து வந்தோம்.
ஆனால், 'கர்ப்பம் என்றால் வயிறு பெரிதாகவில்லையே' என்று என்னிடத்தில் பலர் சந்தேகமாக கேட்டனர்.
இதனால், மருத்துவமனைக்கு சென்று குழந்தை நன்றாக இருக்கிறதா என்று பரிசோதனைக்கு செல்வது போலவும் கணவரிடம் நடித்தும் வந்தேன். இந்த நிலையில், 10 மாதமாகி விட்டதால், 'குழந்தையை எங்கே' என்று கேட்டால் என்று சொல்வது என்ற அச்சம் எனக்குள் ஏற்பட்டது. எனவே, குழந்தை ஒன்றை திருட திட்டமிட்டேன். கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த, பாக்கியலட்சுமியிடம் நன்றாக பேசி அவர்களை நம்ப வைத்தேன். பாக்கியலட்சுமி தனியாக இருந்த போது, மாமியார் குழந்தையை கேட்பதாக கூறி, குழந்தையை கடத்தி சென்றேன்'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.