'எந்த தாய்க்கும் என்னோட கஷ்டம் வர கூடாது'... 'பிறந்த குழந்தையை கொஞ்ச முடியாத நிலை'... 3 மாதம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவில் சிக்கியதால் குழந்தையை பெற்று 3 மாதங்களுக்கு பின்னர் தனது செல்லமகள் லூசியை கொஞ்சி மகிழ்ந்தார்.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில், மேடிசன் நகரில் கெல்சி என்ற பெண் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுக்க இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம், கொரோனா தாக்கியது. அவர் அங்குள்ள செயின்ட் மேரி ஆஸ்பத்திரியில் நவம்பர் 4-ந் தேதி சேர்க்கப்பட்டார்.
அவரை மருத்துவ ரீதியில் கோமாவில் ஆழ்த்திய டாக்டர்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தையை பிரசவிக்க செய்தனர். கெல்சியின் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருந்ததால் டாக்டர்கள் இதைச் செய்தனர்.
டிசம்பர் மாத இறுதியில் கெல்சிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும் என டாக்டர்கள் கருதினர். ஆனால், அவரது உடல்நிலை திடீரென நன்றாக தேறத்தொடங்கியது. ஜனவரி மாதம் மத்தியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே அவரது குழந்தை லூசி என பெயரிடப்பட்டு தந்தை டெரக் டவுன்சென்ட் பராமரிப்பில் வளரத்தொடங்கினாள். ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்த நிலையில், இந்த நான்காவது குழந்தையையும் இக்கட்டான தருணத்தில் அவர் கவனமாக வளர்த்து வந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் கணவன், மனைவி இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கணவர் டெரக் டவுன்சென்ட் சீக்கிரமாக குணம் அடைந்து, மனைவி கெல்சியின் நிலை மோசமானதுதான். கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில்தான் குடும்ப பொறுப்பை டெரக் டவுன்சென்ட் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பின்னர் இப்போது குணம் அடைந்து, கெல்சி வீடு திரும்பியுள்ளார். 3 மாதங்களாக, தன் பிறந்த குழந்தையை பார்க்காத தாய், முதல் முறையாக குழந்தையைப் பார்த்ததும் ஆரவத்தழுவி கண்கலங்கிய நிலையில் முத்தமிட்டார். தாய்-மகள் இடையேயான இந்த பாசப் போராட்டம் காண்போரை கலங்கடிக்கச்செய்துவிட்டது.
"நான் உன்னை மிகவும் நேகிக்கிறேன். நான் உன்னை வெகுவாக தவறவிட்டு விட்டேன்" என்று கூறிக்கொண்டே 3 மாதங்களுக்கு முன்னர் பிறந்த தனது செல்லமகள் லூசியை கொஞ்சி மகிழ்கிறார்.
அது மட்டுமல்ல, "எனக்கு எல்லாமே என் குடும்பம்தான்" என்று உருகுகிறார். இப்போது அந்தக் குடும்பம் ஆனந்த கூத்தாடுகிறது.

மற்ற செய்திகள்
