‘இது கொஞ்சம் சவாலான ஆப்ரேஷன்’!.. வலியால் துடித்த மகள்.. கண்ணீருடன் வெளியே காத்திருந்த தாய்.. அரசு மருத்துவமனையில் நடந்த உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே சிறுமியின் துண்டான விரலை 2 மணிநேரம் போராடி அறுவை சிகிச்சையின் மூலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஒட்ட வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கீதா. கூலி வேலை செய்து வரும் இவர் கணவரை பிரிந்து, தனது 12 வயது மகள் சரண்யாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு சங்கீதா வேலைக்கு சென்றுள்ளார். அம்மாவுக்கு உதவியாக மகள் சரண்யாவும் உடன் சென்றுள்ளார்.
அப்போது சரண்யா அரிவாளால் கரும்பை வெட்டும்போது எதிர்பாரதவிதமாக அவரது கையில் வெட்டியுள்ளது. இதனால் அவரது இடது கையின் ஆள்காட்டி விரலின் நுனி பகுதி எலும்போடு துண்டாகி ரத்தம் அதிக அளவில் வெளியாகியுள்ளது. வலியால் சரண்யா துடிக்கவே, இதைப் பார்த்ததும் தாய் சங்கீதா அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே துணியால் மகளின் கையை சுற்றுக்கொண்டு, துண்டான விரலுடன் பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியுள்ளார். இது சற்று சவாலான அறுவை சிகிச்சை என்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை மறுக்கப்படவே, இறுதியாக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு தனது மகளை சங்கீதா அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து இரவு சுமார் 12.30 மணியளவில் அரசு மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் ஜான் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழு அறுவைச் சிகிச்சைக்கு தயாரனது. சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின் சிறுமியின் துண்டான விரல் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. கண்ணீருடன் வெளியே காத்திருந்த தாய் சங்கீதா, மருத்துவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இப்படியொரு சவாலான அறுவை சிகிச்சை செய்தது இதுதான் முதல்முறை என்பதால் மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.