'கழிவறை கட்டடங்களில் அம்மா கிளினிக் நடத்தலாமா?'- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின் காரசார விவாதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'அம்மா கிளின்க்' ஏன் மூடப்பட்டது என்பது குறித்து சட்டசபையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனான விவாதத்தில் விளக்கம் அளித்துள்ளார் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கலைவாணர் அரங்கத்தில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இன்றைய விவாதத்தின் போது சட்டசபை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா கிளினிக் மூடப்பட்டது குறித்தும் அம்மா சிமென்ட் பெயர் மாற்றம் குறித்தும் பேரவையின் போது கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார். ஸ்டாலின் பேசுகையில், "அம்மா கிளினிக் மூடப்பட்டது அரசியல் காரணங்களுக்கான என எதிர்கட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அம்மா கிளினிக் மூடப்படவில்லை.
போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சரியான அளவில் மருத்துவர்கள் இல்லாமல் அம்மா கிளினிக்குகள் நடந்த வந்தன. சில இடங்களில் எல்லாம் பழுதடைந்த கழிவறைகளை சரி செய்து அம்மா கிளினிக் திறந்து இருந்தீர்கள். இதனால், தான் அம்மா கிளினிக் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி கூட பல கிளினிக்குகளில் இல்லை. இதில் அரசியலும் இல்லை, பழிவாங்கும் நோக்கமும் இல்லை" எனப் பதில் அளித்தார்.
பின்னர் அம்மா சிமென்ட் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் இடையே காரசார விவாதம் நடத்தப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடி குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்தார்.