ஐபிஎல்-இல் களமிறங்கும் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள்!.. எந்த அணியில் யார்?.. ட்ராக் ரெக்கார்ட் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Sep 17, 2020 04:02 PM

நாளை மறுதினம் தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அணிகளில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.

ipl 2020 tamil nadu players teams track record cricket csk rcb kkr

சென்னை அணியில் 3 பேர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜெகதீசன், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், இந்திய பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 2018, 2019-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியில் இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஜெகதீசன் இந்த முறையும் தக்க வைக்கப்பட்டார். ஆனால், ஐ.பி.எல்.-ல் அறிமுகம் ஆகும் வாய்ப்பு தான் இதுவரை அவருக்கு கனியவில்லை. டோனி விக்கெட் கீப்பராக இருப்பதால் இந்த தடவையும் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரின் நிலைமையும் இது தான். பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் யாரேனும் காயமடைந்தாலோ அல்லது தொடர்ந்து சொதப்பினாலோ மட்டுமே சாய் கிஷோருக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். ஆனால், அனுபவம் வாய்ந்த 35 வயதான முரளிவிஜய் ஆடும் லெவனில் சில ஆட்டங்களில் நிச்சயம் இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.

வாஷிங்டன் சுந்தர்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில், சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு தக்கவைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2017-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல்.-ல் விளையாடி வருகிறார். இதுவரை 21 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளும், 75 ரன்களும் எடுத்துள்ளார். ஐ.பி.எல்.-ல் பெரிய அளவில் ஜொலிக்காத வாஷிங்டன் சுந்தர், அமீரக ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் (டி.என்.பி.எல்.) அசத்தியதன் மூலம் ஐ.பி.எல்.-ல் வாய்ப்பு பெற்றவர் ஆவார். 2017-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே எடுத்தார். தற்போது ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள அவர் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

சென்னையில் வசிக்கும் 29 வயதான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஐதராபாத் அணியின் சரியான கலவைக்கு முக்கியமான வீரராக இருக்கிறார். மிதவேகப் பந்து வீச்சு, பேட்டிங்கால் அணிக்கு அனுகூலமாக இருப்பார்.

கொல்கத்தா அணி

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மேலும் இரு தமிழ்நாட்டு வீரர்களான சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, எம்.சித்தார்த் இருப்பது சிறப்பம்சமாகும். கடந்த சீசனில் வியப்பூட்டும் வகையில் ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி ஒரு ஆட்டத்தில் ஆடி 35 ரன்னுக்கு ஒரு விக்கெட் எடுத்தார். இதில் தனது முதல் ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அதன் பிறகு விரலில் காயமடைந்ததால் ஒதுங்க வேண்டியதாகி விட்டது. பந்து வீச்சில் 7 வித வித்தியாசத்தை காட்டும் திறன் படைத்த வருண் சக்ரவர்த்தியை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்பலாம். அவ்வாறான சமயங்களில் களத்தில் தமிழ் விவாதங்கள் கலகலக்கும். கொல்கத்தா அணிக்காக வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு ஏலம் போனது கவனிக்கத்தக்கது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடிய 22 வயதான சித்தார்த் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு எடுக்கப்பட்டார். இவரையும் தேவையான சமயத்தில் தினேஷ் கார்த்திக் பயன்படுத்திக் கொள்வார்.

அஸ்வின்கள்

பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இழுக்கப்பட்ட ஆர்.அஸ்வின் சுழல் ஜாலத்தில் எதிரணியை மிரட்டக்கூடியவர்.

மன்கட் ரன்-அவுட் சர்ச்சைக்கு பிறகு அஸ்வின் மீண்டும் அது போன்று யாரையும் அவுட் ஆக்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் நிலவுகிறது. ஐ.பி.எல்.-ல் 125 விக்கெட் வீழ்த்தியுள்ள அஸ்வின் இந்த சீசனில் அந்த எண்ணிக்கையை 150-ஆக உயர்த்தினாலும் ஆச்சரியமடைவதற்கில்லை. சில ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைபயிற்சி பவுலராக வலம் வந்த 30 வயதான முருகன் அஸ்வின் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் புனே அணிக்காக விளையாடினார். அதன் பிறகு, டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடம் பெயர்ந்த முருகன் அஸ்வின் இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தக்க வைக்கப்பட்டார். ஐ.பி.எல்-ல் 22 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ipl 2020 tamil nadu players teams track record cricket csk rcb kkr | Sports News.