'சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கமா'?... 'தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை'... என்னென்ன அறிவிப்புகள் வரும்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாகச் சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் கோவையில் 963 பேரும், திருவள்ளூரில் 751 பேரும், திருநெல்வேலியில் 741 பேரும், தூத்துக்குடியில் 594 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனிடையே கடந்த 26-4-2021 அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு மீண்டும் தியேட்டர்கள், மால்கள், கேளிக்கை கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேர்களும், இறுதி ஊர்வலம் சார்ந்த சடங்குகளில் 25 பேர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தச்சூழ்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்றைய ஆலோசனைக் கூட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களும் சென்னை, கோவை மாநகராட்சி கமிஷனர்களும் பங்கேற்றனர்.
இதில் மே மாதம் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட வேண்டிய கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்படக் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கை சில நாட்களுக்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது. முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளைக் கூடுதலாகக் கொண்டு வருவது குறித்தும் கருத்துக் கேட்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு குறித்து அரசு அறிக்கை வெளியிட்டு வருவதால் 1-ந் தேதியிலிருந்து பின்பற்றப்பட வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்துள்ளனர். அநேகமாக இன்று மாலை அல்லது நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.