'புதிதாக பரவும் டிக் போர்ன் வைரஸ்'... '7 பேர் பலியானதால் அச்சத்தில் சீன மக்கள்'... 'தொற்று பரவல் குறித்து வல்லுநர்கள் விளக்கம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள வைரஸ் பாதிப்பால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள டிக் போர்ன் எனும் வைரஸ் தாக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 60 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் உண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளதாகவும், மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவக்கூடிய தன்மை கொண்டது எனவும் வல்லுநர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் இந்த புதிய வைரஸால் 37க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்ஹுய் மாகாணத்தில் 23 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிழக்கு சீனாவின் ஷெஜியாங், அன்ஹுய் மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் ரத்தம் அல்லது சளி மூலம் மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவக்கூடும் எனவும், உண்ணிகள் கடிப்பது மட்டுமே இந்த வைரஸ் பரவுவதற்கான வழியாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் பயப்பட தேவையில்லை எனவும் சீன மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸும் முதலில் சீனாவில்தான் பரவத் தொடங்கியது என்பதால், இது சீன மக்களை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளை சேர்ந்த மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
