லெபனான் வெடிவிபத்து... 'தமிழகத்திலும் இந்த வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறதா!?'.. அதிகாரிகள் கூறுவது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெய்ரூட் வெடிவிபத்தை தொடர்ந்து, சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம் அளித்து உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்துள்ளனர். மேலும் 5,000 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக உலக நாடுகள் தங்களது நாட்டில் உள்ள துறைமுகங்களில் சேமித்து வைத்திருக்கும் வெடிக்கக் கூடிய வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சுமார் 35-க்கும் அதிகமான கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செய்தியானது, சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறக்குமதி செய்த சுமார் 740 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், வட சென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னை சுங்கத்துறை அலுவலகம் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறைக்குச் சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை; அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கடந்த ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளதாகவும், மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ-ஆக்சன் முறையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளதாகவும் சுங்கதுறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில், "சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!
சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
