'என்ஐடியில் எம்.எஸ்சி படிப்பு'... 'மாசம் பல லட்சம் சம்பளம்'... 'எல்லாத்தையும் உதறிவிட்டு சமையல்காரர் வேலை'... ஆச்சரியப்பட வைக்கும் பின்னணி காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாசம் பல லட்சம் சம்பளம் தரும் வேலையை உதறி விட்டு, இளைஞர்கள் பலர் விவசாயம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் கோவிலில் சமையல்காரர் வேலை செய்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்சன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு திருச்சி என்ஐடியில் எம்.எஸ்சி., (அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ்) படிப்பை முடித்துவிட்டு, பல லட்சம் சம்பளத்துக்கு ஏறத்தாழ 9 ஆண்டுகள் பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அப்போது வார விடுமுறை தினங்களில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குத் தனது நண்பர்களுடன் வருவதை வழக்கமாக வைத்திருந்த அவர், அங்கு வந்து கோவிலில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் செய்து வந்த வேலையை 2017-ம் ஆண்டில் துறந்த ஸ்ரீவத்சன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து தற்போது நிரந்தர ஊழியராக மாறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்ரீவத்சன், ''படிக்கும்போது இதுபோன்ற எண்ணங்கள் எனக்கு வந்தது இல்லை. வேலைக்குச் சென்ற பிறகு அடிக்கடி நண்பருடன் வந்து ஸ்ரீரங்கம் கோயிலில் சேவையில் ஈடுபட்டு வந்தேன். இந்த சூழ்நிலையில் 2016ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 மாதங்கள் கழித்து நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையைத் துறந்து விட்டு, கோயிலில் சேவையில் ஈடுபடலாம் என முடிவு செய்து மனைவியிடம் கூறினேன். அவர் அதை ஒப்புக்கொண்ட நிலையில், எனது குடும்பத்தில் உள்ள பலரும் எனது முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதையடுத்து 2017-ல் மனைவியுடன் ஸ்ரீரங்கம் வந்தேன். தொடர்ந்து கோயில் மடப்பள்ளியில் சேவை செய்து வருகிறேன். கோவையில் வேலை பார்த்த காலங்களில் நண்பர்களுடன் இணைந்து கேன்டீன் நடத்திய அனுபவம், சிறுவயதிலிருந்தே சமையலில் உள்ள ஈடுபாடு ஆகியவை என்னை மடப்பள்ளி சேவைக்குக் கொண்டு சென்றது. மடப்பள்ளியில் சேவை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அறிவியல் தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலத்திலேயும் ஆச்சாரத்துடனும், அனுஷ்டானங்களை கடைப்பிடித்தும் வாழ்ந்து வருபவர்கள் மட்டுமே இங்கு பணியாற்ற முடியும்.
பணத்தை ஒரு பொருட்டாக நினைத்து பணம் ஈட்டுவது பெரிதல்ல, அது மனநிறைவைத் தராது. படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பில்லை என்றாலும், இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து இதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அதனால் மனநிறைவுடன் இங்கு வாழ்ந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
