"இப்படியே போச்சுனா"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா?!!'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாதத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், "சென்னையில் 57 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏறக்குறைய 30 லட்சம் பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்ற நடவடிக்கைகளை இன்னும் 3 முதல் 4 மாதங்கள் தொடர்ந்து செய்தால் மட்டும்தான் நல்ல முடிவு கிடைக்கும். இதுவரை 30 லட்சம் பேர் வீட்டு தனிமையை முடித்துள்ளனர். இன்றைய தினத்தில் 2¼ லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையில் பரிசோதனை விகிதம் 3 மடங்குக்கு மேல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனையில் 16 லட்சத்தை நெருங்கி உள்ளோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 9 சதவீதமாக இருக்கும் பாதிப்பு விகிதம், இந்த மாத இறுதிக்குள் 7 முதல் 6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் முகக்கவசம் அணியாமல் மக்கள் அலட்சியமாக உள்ளதால், நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
முககவசம் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு மருந்து. இன்னும் 3 மாத காலத்துக்கு முககவசம் கட்டாயம் பொது மக்கள் அணிய வேண்டும். சென்னையில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2.25 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை, காவல்துறையுடன் சேர்ந்து முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்படும். அதேபோல கடைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் ஒரு மாத காலத்துக்கு மூடி சீல் வைக்கப்படும்.
முன்னதாக சென்னையில் ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலே அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 2 அல்லது 3 நபருக்கு பாதிப்பு ஏற்பட்டாலே அந்த தெருக்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. சென்னையில் முன்னர் 2,500க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கடந்த 87 நாட்களாக ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஒரே சீராக இருந்து வருவதே தொற்று அபாய காலத்தில் ஒரு சாதனையாக தான் சொல்ல வேண்டும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, நோய் தொற்று இரட்டிப்பு ஆக 93 நாட்கள் ஆகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
