'சார், வண்டியை ஓரம் கட்டுங்க'... 'ஹலோ, நான் யார் தெரியுமா, போட்டோ காட்டவா'?... 'மனைவிக்காக போட்ட பிளான்'... சென்னை தொழிலதிபர் குறித்த பகீர் தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் ஒரு காவல்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி எனப் பல பகுதிகளில் வலம் வந்துள்ளார்.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் பல தொழில்கள் செய்து வந்த நிலையில் அதில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியைச் சமாளிக்க அவரிடம் தான் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி ஆணையராகிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
அதோடு மனைவியை நம்ப வைக்க நண்பர் ஒருவர் உதவியுடன் ஜீப் ஒன்றை வாங்கி அதை காவல்துறை வாகனம் போல் மாற்றியுள்ளார். அந்த ஜீப்பை ஓட்டிச்சென்று மனைவியிடம் காட்டி, பார் எனக்காக காவல்துறை கொடுத்த வாகனம் என கூறி மனைவியை முழுமையாக நம்பவைத்துள்ளார். அதோடு பணிக்குச் செல்வதாகக் கூறி ஜீப்பை எடுத்துக்கொண்டு கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந்துள்ளார்.
இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆகியோரை சந்தித்துத் தான் ஒரு காவல்துறை உதவி ஆணையர் எனப் பொய் சொல்லி அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளையும் ஏமாற்றிச் சந்தித்து வந்துள்ளார்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பழகி அவர்களிடமும் தான் ஒரு உதவிக் ஆணையர் என நம்பவைத்து பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதை வலைத்தளத்திலும் பரப்பிவந்துள்ளார். இவர் மீது யாராவது சந்தேகப்பட்டால் இந்தப் படங்களைக் காட்டி நம்பவைத்துள்ளார்.
இதனிடையே கேரள மாநிலத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு குமுளி வழியாகத் தேனி மாவட்டத்திற்குள் தனது சைரன் வைத்த காரில் வந்துள்ளார். அப்போது குமுளி சோதனைச்சாவடியில் சந்தேகமடைந்த போலீஸார் விசாரித்தபோது தான் கியூ பிரிவில் உதவி ஆணையராக பணிபுரிவதாகக் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திற்குள் வந்தபிறகு, தான் உளவுத்துறை உதவி ஆணையர் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் சந்தேகமடையவே, இவரது காரை தேனி போலீஸார் கண்காணிக்கத் தொடங்கினர். விஜயனின் கார் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்ததை அறிந்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து உதவிக் ஆணையர் என்று சொல்லிக்கொண்டு ஷைரன் வைத்த காரில் ஒருவர் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி அவரைத் தொடர்ந்து கண்காணிக்கச் சொல்லியுள்ளனர்.
இந்நிலையில் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் கார் வந்தபோது சோதனைச்சாவடியில் இருந்த போலீஸார் அவரது காரை நிறுத்தியுள்ளனர். மேலும் சோதனை சாவடியில் இருந்த போலீசார், ''சார் ஒரு சிறிய வெரிஃபிகேஷன் பண்ணவேண்டும் உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள் எனக் கூறியுள்ளார்கள். இதையடுத்து விஜயன் தனது அடையாள அட்டையைக் காட்டிய நிலையில் அது போலியானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பட்டிவீரன்பட்டி காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில், அவர் தான் ஒரு போலி போலீஸ் என்பதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து போலி துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. உதவிக் ஆணையர் எனச் சொல்லிக்கொண்டு தவறாகச் செயல்பட்டு யாரையும் மிரட்டிப் பணம் பறித்ததாக விசாரணையில் தகவல்கள் கிடைக்கவில்லை என போலீசார் கூறியுள்ளார்கள்.
தனது மனைவியை ஏமாற்றத் தொடங்கிய நாடகம், ஒரு கட்டத்தில் நிரந்தரமான உதவிக் கமிஷனர் வேஷமாக விஜயனுக்கு மாறி, அதுவே அவருக்குச் சிறை கம்பிகளை தற்போது பரிசாக வழங்கியுள்ளது.

மற்ற செய்திகள்
