‘சென்னையில் அம்மா உணவகம்’... ‘பெண் பணியாளருக்கு கொரோனா’... 'எப்படி பரவியது'... 'வெளியான தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு அமலில் இருப்பதால், உணவு விடுதிகள், ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், அம்மா உணவகத்தில் இலவசமாக பலர் சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கஜபதி தெருவில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிக அளவில் மக்கள் வந்து உணவு சாப்பிட்டு சென்றனர். இந்த நிலையில், அந்த அம்மா உணவகத்தில் பணியாற்றிய 52 வயதுடைய பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வெங்கடேசன் தெருவில் வசித்து வரும் இவர், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவருடன் தொடர்புடைய பலரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி அம்மா உணவகம் மூடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, திருவல்லிக்கேணியில் உள்ள வி ஆர் பிள்ளை தெருவில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்தத் தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.