'டிவிக்கு மேலே இருந்த செல்போன்'... 'செல்போன் ரிங்டோன் கேட்டதும் போனை எடுக்க ஓடிய குழந்தை'... சென்னையில் நடந்த கோர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் கவனக்குறைவாகச் செய்யும் சில விஷயங்கள் எவ்வளவு பெரிய கோரத்தில் சென்று முடியும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.
சென்னை கிழக்குத் தாம்பரம், சேலையூர் அடுத்த அகரம் தென் அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் பாலாஜி. இவருக்கு 3 வயதில் கவியரசு என்ற குழந்தை உள்ளது. இவரது வீட்டில் உள்ள அலமாரியில், தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டு வைப்பது வழக்கம். சம்பவத்தன்று பாலாஜியின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, செல்போன் ரிங்க்டோன் சத்தத்தை கேட்டு செல்போனை எடுக்க ஓடிச் சென்றுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜ் வயரில் சிக்கி அருகிலிருந்த தொலைக்காட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. தொலைக்காட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்ததும் சிறுவன் கவியரசு அலறி துடித்தான். மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் பெற்றோர், மகன் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதார்கள்.
இதையடுத்து குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். சேலையூர் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 வயதுக் குழந்தையின் தலையில் தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்துள்ள சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.