"டெய்லி ரூ.10 லட்சம் வர லாபம் பார்க்கலாம்.." குடும்பமாக போட்ட பகீர் பிளான்.. திடுக்கிட வைக்கும் மோசடி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரின் படி, சிவசங்கரி என்ற அந்த பெண்ணின் எதிர் வீட்டில், கார்த்திகேயன் மற்றும் காமாட்சி என்ற தம்பதி, அவரது குடும்பத்தினருடன் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கார்த்திகேயன், காமாட்சி, அவரது உறவினர்களான விக்னேஸ்வரன், புவனேஸ்வரி உள்ளிட்ட பலரும் சிவசங்கரி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் தினமும், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும் சிவசங்கரியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில், இதற்கு மறுப்பு தெரிவித்த சிவசங்கரி மற்றும் அவரது கணவர், மெல்ல மெல்ல இதனை நம்பி உள்ளனர். தினமும் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்பதால், அவர்களும் இதனை நம்பி இறங்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிவசங்கரியின் கணவர், தனது மாத சம்பளம் சேமிப்பு, நபர்களிடம் இருந்து கடன் வாங்கிய பணம் உட்பட மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவர்கள், காமாட்சி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்ததாக அடுத்த ஒரு மாதத்தில், ஊக்க தொகை என 50 ஆயிரம் ரூபாயையும் திருப்பி அவர்கள் சிவசங்கரி கையில் கொடுத்துள்ளனர்.
ஒரு முறை மட்டுமே பணம் கொடுத்தவர்கள், அடுத்தடுத்த மாதங்களில் பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வருமான வரித்துறை பிரச்சனை உள்ளிட்ட காரணங்களை கூறி, கார்த்திகேயனின் குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், அவர்கள் குடும்பத்தினர் மீது சிவசங்கரிக்கு சந்தேகம் வரவே, 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனையும் அளித்து விடுவதாக கூறி, வேறு ஏதோ நபரின் பெயரில் காசோலையையும் சிவசங்கரி கையில் காமாட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதிலும் சிவசங்கரி மற்றும் அவரது கணவருக்கு சந்தேகம் எழவே, தெடர்ந்து போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பங்கு சந்தை ட்ரேடிங் என பொய் சொல்லி, முதலீடாக பலரிடம் இருந்து பல கோடி ருபாய் பணம் பெற்றது மட்டுமில்லாமல், அதனை வேறு சில நிறுவனங்களில், காமாட்சி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான விக்னேஸ்வரன், அவரது மனைவி புவனேஸ்வரி பெயரில் டெபாசிட் செய்துள்ளதும் தெரிய வந்தது.
அது மட்டுமில்லாமல், பல்வேறு இடங்களில் சொத்துக்கள், ஆடம்பர கார்கள் மற்றும் தங்க நகைகள் வாங்கி வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. சிவசங்கரியை போல பலரும் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், காமாட்சி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
காமாட்சியின் கணவர் கார்த்திகேயன் உள்ளிட்ட மற்ற சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read | ரத்தன் டாடாவே முதலீடு செய்த 'Start up' நிறுவனம்.. "இந்தியாலயே இதான் முதல் தடவ.." சபாஷ் போட வைத்த உதவியாளர்!!