"கல்யாணம் ஆகி 54 வருஷம் ஆயிடுச்சு.." மூன்றாவது முயற்சியில் நடந்த அதிசயம்.. உச்சகட்ட ஆனந்தத்தில் 70'S தம்பதி
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் ஆனதும், பலரும் தங்களின் அடுத்த தலைமுறை உருவாக குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
இதில், பலருக்கு உடனே குழந்தைகள் கிடைத்து வந்தாலும், சிலருக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும். அப்படி வரும் சூழ்நிலையில், மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, தங்கள் வாழ்நாளை இனிதாகவும் மாற்றவும் அவர்கள் முயற்சிப்பார்கள்.
அந்த வகையில், திருமணமாகி சுமார் 54 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய தம்பதிக்கு நடந்துள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்னும் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் கோபிசந்த் (வயது 75). இவரது மனைவியின் பெயர் சந்திராவதி (வயது 70). இவர்களுக்கு திருமணமாகி 54 ஆண்டுகள் ஆகி விட்டது. இருந்தாலும், இந்த ஜோடிக்கு குழந்தைகள் கிடையாது. அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினர் வழியாக கருவுறுதல் மையம் ஒன்றை கோபிசந்த் நாடி உள்ளார். முன்னதாக, பெருநகரங்களில் உள்ள நிறைய மையங்களுக்கு சென்றும் அது பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் பின்னர், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் உள்ள கருவுறுதல் மையத்திற்கு சென்றுள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, மூன்றாவது முயற்சியில் IVF மூலம் சந்திராவதியால் கருத்தரிக்க முடிந்ததாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியை உருவாக்கி இருந்தாலும், மறுபுறம் வயது முதிர்வின் காரணமாக ஒரு பக்கம் பயமும் இருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ஆரோக்கியமான குழந்தை ஒன்றையும் சந்திராவதி பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்ததால் உற்சாகமடைந்த தந்தை கோபிசந்த், "எனது பெற்றோர்களுக்கு நான் ஒரே மகன். அப்படி இருக்கும் போது எனது குடும்பத்தை முன்னெடுத்து செல்ல முடிந்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஆபத்துள்ள ஒரு சமயத்தில் கூட, IVF மூலம் 70 வயது மூதாட்டி ஒருவர், குழந்தையை பெற்றுள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து, ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு IVF தொடர்பாக சிகிச்சை மேற்கொள்ள அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே சந்திராவதி கருவுற்றது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல், இந்த வயதில் குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று தான். அப்படி இருந்தும் தற்போது தடைகளை தாண்டி வென்றுள்ளார் தாய் சந்திராவதி.