டெல்லியில் இருந்து வந்த வேட்பாளர் லிஸ்ட்!.. 38 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக!.. அதிமுக கூட்டணியில் யார்? எங்கே? போட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Jan 04, 2021 08:00 PM

அ.தி.மு.க. கூட்டணியில் 38 தொகுதிகளை பா.ஜ.க. குறிவைத்துள்ளது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களும் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

bjp targets 38 assembly seats in admk alliance candidates list

கடந்த 2019–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

ஆனால், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா? என்பது கேள்விக் குறிதான்.

ஏனென்றால், கூட்டணியில் உள்ள பா.ம.க., அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அவர்கள் வெளியிடும் அறிக்கைகளே அதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

மதில்மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க.வும் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே, அ.தி.மு.க. கூட்டணி இறுதியாகும் என்று தெரிகிறது.

குறிவைக்கும் 38 தொகுதிகள்

ஆனால், சமீபத்தில் சென்னைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்தபோதே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்வது உறுதியானது. அவர் பங்கேற்ற விழா மேடையிலேயே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதை அறிவித்தனர்.

வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க. கூட்டணியில் யார் தொடருவார்கள்? யார் புதிதாக இணைவார்கள்? என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், பா.ஜ.க. 38 தொகுதிகளை குறிவைத்துள்ளது. அதற்கான வேட்பாளர்கள் யார்? என்பதையும் அக்கட்சி இப்போதே பட்டியலாக தயாரித்துள்ளது.

அதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பா.ஜ.க. மாநில தேர்தல் தேர்வு குழுவினர் இறுதி செய்துள்ளனர். தற்போது அந்தப் பட்டியல், டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. குறிவைத்துள்ள 38 தொகுதிகளும், அதில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் விவரம் வருமாறு:–

வேட்பாளர்கள் யார்?

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – குஷ்பு. தி.நகர் – எச்.ராஜா. கொளத்தூர் – ஏ.என்.எஸ்.பிரசாத். மயிலாப்பூர் – கரு.நாகராஜன். துறைமுகம் – வினோஜ் செல்வம். வேளச்சேரி – டால்பின் தரணி. மாதவரம் – சென்னை சிவா. திருவள்ளூர் – லோகநாதன். செங்கல்பட்டு – கே.டி.ராகவன். கே.வி.குப்பம் – கார்த்தியாயினி. பெண்ணாகரம் – வித்யராணி (வீரப்பன் மகள்). திருவண்ணாமலை – தணிகைவேல்.

போளூர் – சி.ஏழுமலை. ஓசூர் – நரசிம்மன். சேலம் மேற்கு – சுரேஷ் பாபு. மொடக்குறிச்சி – சிவசுப்பிரமணியன். ராசிபுரம் – வி.பி.துரைசாமி. திருப்பூர் வடக்கு – மலர்கொடி. கோவை தெற்கு – வானதி சீனிவாசன். சூலூர் – ஜி.கே.நாகராஜ். திருச்சி கிழக்கு – டாக்டர் சிவசுப்பிரமணியம். பழனி – என்.கனகராஜ். அரவக்குறிச்சி – அண்ணாமலை. ஜெயங்கொண்டம் – அய்யப்பன்.

திட்டக்குடி – தடா பெரியசாமி. பூம்புகார் – அகோரம். மயிலம் – கலிவரதன். புவனகிரி – இளஞ்செழியன். திருவையாறு – பூண்டி வெங்கடேசன். தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம். கந்தர்வகோட்டை – புரட்சி கவிதாசன். சிவகங்கை – சத்தியநாதன். பரமகுடி – பொன் பாலகணபதி. மதுரை கிழக்கு – ராம ஸ்ரீனிவாசன். நெல்லை – நயினார் நாகேந்திரன். சாத்தூர் – மோகன்ராஜூலு. தூத்துக்குடி – சசிகலா புஷ்பா. நாகர்கோவில் – காந்தி.

அ.தி.மு.க. எரிச்சல்

தற்போதைய நிலையில், அ.தி.மு.க. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டால்தான், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பது முடிவு செய்யப்படும்.

ஆனால், அதற்கு முன்பாகவே, பா.ஜ.க. 38 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டதும், வேட்பாளர்களின் விவரங்களை கசியச் செய்ததும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க.வை எரிச்சலடைய செய்துள்ளது.

வேட்பாளர்கள் விவரங்களை பார்த்து பா.ஜ.க. நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bjp targets 38 assembly seats in admk alliance candidates list | Tamil Nadu News.