குஷ்பு அரசியலுக்கு வந்தது எப்படி?.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்!.. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரசியல் பயணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்களின் கற்பு குறித்து அவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. குஷ்புக்கு எதிராக போராட்டங்கள், வழக்குகள் தமிழகத்தில் நடந்தன.
அதைத் தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் இணைந்தார் குஷ்பு.
2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது என குஷ்பு பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஷ்புவின் இந்தப் பேச்சை எதிர்த்து திமுகவினர் குஷ்புவை தாக்கி அவமானப்படுத்தினர். திமுக-க்குள் குஷ்புவுக்கு பல பிரச்னைகள் வரத்தொடங்கின. இதையடுத்து 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து விலகினார் குஷ்பு.
2014-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து காங்கிரஸில் இணையப் போவதாக குஷ்பு அறிவித்தார். தனது வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும், எனது சொந்த வீட்டுக்கு வந்து விட்டதைப் போல் உணர்கிறேன் என்றும் அப்போது அவர் பேட்டியளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வகித்து வந்தார். காங்கிரஸ் கட்சியிலும், அவ்வப்போது அவரது கருத்துகள் கட்சிக்குள் எதிர்ப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தன. எனினும், சர்ச்சைகளுக்கு எல்லாம் சலிக்காமல் தனது தரப்பு விளக்கத்தை தொடர்ந்து கொடுத்து வந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைவராக இருந்தபோது, மாநில அரசியலில் ஆர்வம் காட்டினார். அப்போது, ஈ.வி.கே.எஸ் ஆதரவாளராக பார்க்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் நடிகை நக்மாவுக்கும், குஷ்புவுக்கும் மோதல்கள் எழுந்தன. தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா நீக்கப்பட்டதற்கு குஷ்பு ஒரு முக்கிய காரணம் எனவும் அப்போது பேசப்பட்டது.
2016 சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. கடந்த ஜுலை மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட் போன்றவர்கள் தலைவர் பதவி ஏற்கலாம் என்ற குஷ்பு கருத்து மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வரும் புதிய கல்விக் கொள்கைக்கு அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு ஆதரவாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமார் படத்திறப்பு விழாவை, டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என கூறி தனது வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் குஷ்பு.
தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருக்கும்போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கும் வாழ்த்து கூறினார். இதனால் சமீப காலமாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தத் தகவலை அண்மையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார். அத்துடன், தான் காங்கிரஸிலிருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் கூறியிருந்தார். ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், பலர் என்னிடம் ஒரு மாற்றத்தைப் பார்க்கின்றனர்; மாற்றம் தவிர்க்க முடியாதது என பதிவிட்டார்.
இந்நிலையில், நேற்று டெல்லி செல்லும் முன் பாஜகவில் இணைவது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் கூறினார். டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பு இன்றுதான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமையும் அவரை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது அவர் பாஜகவில் தன்னை அதிகாரப் பூர்வமாக இணைத்துக்கொண்டார்.