அரியலூர் மாணவி வழக்கு.. நீதியின் பக்கம் நின்ற உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி.. அண்ணாமலை
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரிவிட்டுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி என அண்ணாமலை கூறியுள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு விவகாரத்தில் உண்மை நிலை கோரி பாஜக நடத்திய போராட்டம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த விவாகரம் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய தலைமை இந்த விவகாரம் தொடர்பாக தனியாக குழு அமைத்துள்ளது.
இது ஒருபுறம் எனில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் பாஜக மத அரசியல் செய்வதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தான் சிபிஐக்கு வழக்கை மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரியலூரை சேர்ந்த பள்ளி மாணவி தஞ்சாவூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என்று பாஜக பரபரப்பு புகார் கூறியது.
மதமாற்ற அழுத்தம்
மாணவியின் பெற்றோரும் மத மாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் காரணம் இல்லை, மெஜிஸ்டிரேட் வாக்குமூலத்தில் மத மாற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்தது,
இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை முடிவிற்கு வந்தது. அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், அரியலூர் மாணவி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அண்ணாமலை தொடக்கத்தில் இருந்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இதேபோல் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் அரியலூர் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் கோரியிருந்தார். இந்நிலையில் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதை வரவேற்றுள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ, நீதிக்கான போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

மற்ற செய்திகள்
