பறவைக்காய்ச்சல் எதிரொலி!.. இறைச்சிக் கடைகளுக்கு... அவசர அவசரமாக நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி!.. கறி வாங்கும் போது 'இத' கவனிக்கணும்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், இறைச்சிக் கடைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இறைச்சிக் கடைகளில் ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக கோட்ட சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கடைகளில் உள்ள கோழி கூண்டுகளை நுகர்வோர் தொடாதவாறு தூரத்தில் வைக்க வேண்டும் எனவும், கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளை குளோரின் டை ஆக்சைடு உள்ளிட்ட கிருமிநாசினிகளை கொண்டு கடை உரிமையாளர்கள் தினசரி இரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல், இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு 11 நெறிமுறைகளை வகுத்துள்ள சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை, அவற்றை கடைப்பிடிக்காவிட்டால் பொதுசுகாதார சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
அதோடு நுகர்வோரும் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்த பின்னரே உண்ண வேண்டும் என சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை காட்டுக்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்
