‘உழைச்ச காசுதாங்க என்னைக்கும் நிலைக்கும்’!.. துப்புரவு பணியாளர் செய்த செயல்.. சென்னை அடையாரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் குப்பை எடுத்து செல்லும் வாகனத்தில் கிடைத்த தங்க நகையை உரிய நபரிடம் துப்புரவு தொழிலாளர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் பேட்டரியால் இயங்கும் துப்புரவு வாகனத்தை மூர்த்து என்பவர் ஓட்டி வருகிறார். தினந்தோறும் அந்த பகுதியில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் சேரும் குப்பைகளை வாகனம் மூலம் சேகரித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று அவர் தனது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.
அப்போது தான் சேகரித்த குப்பையில் ஒரு பெட்டி இருப்பதை பார்த்துள்ளார். உடனே அதை திறந்துப் பார்த்தபோது, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும், தங்க நகைகளும் இருந்துள்ளன. இந்த தகவலை உடனடியாக தனது மேற்பார்வை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து உரியவரிடம் அந்த நகைகள் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்து துப்புரவு வாகன ஓட்டுநர் மூர்த்தி, ‘நான் கண்ணகி நகரில் வசித்து வருகிறேன். முதலில் பெயிண்டராக வேலை செய்தேன். அப்புறம் ஆட்டோ ஓட்டினேன். ஆனால் சரியாக சவாரி கிடைக்கவில்லை. இப்போது இந்த பேட்டரி வாகனத்தை ஓட்டி வருகிறேன். உழைத்து சம்பாதிப்பதுதான் என்றும் நிலைக்கும். எனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெயிண்டராக வேலை பார்த்தபோது மூர்த்திக்கு ஒரு பை கிடைத்துள்ளது. அதில் 70 ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு செல்போனும் இருந்துள்ளது. அதை உரியவரிடம் தேடி சென்று கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தெரிவித்த துப்புரவு பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரி சதிஷ், ‘மூர்த்தி மட்டுமல்ல, எல்லா துப்புரவு தொழிலாளர்களும் அவர்கள் வேலை செய்கின்றபோது தட்டுப்படும் மதிப்புமிக்க பொருட்களை உரியவரிடம் நிச்சயம் ஒப்படைத்துவிடுவர்’ என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நகையை உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளர் மூர்த்திக்கு பலரும் தங்களது பாரட்டை தெரிவித்து வருகின்றனர்.