'அங்குட்டு வேணாம் இங்குட்டு போவோம்'... 'பாஜக'வுக்கு நோ சொல்லி தினகரனுடன் கைகோர்த்த 'பிக்பாஸ் பிரபலம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசியல் களம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்று சொல்லும் அளவிற்குப் பல காட்சிகள் அரங்கேறி வருகிறது. தேர்தல் பிரசாரம், கூட்டணி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் மும்முரமாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
மக்களைக் கவரும் வண்ணம் பல சிறப்பு அம்சங்கள் தேர்தல் அறிக்கை மூலம் அறிவிக்கப் பல கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தயாராகி வருகிறது. இதனிடையே தமிழகத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் பாஜகவில் சேர்ந்த வண்ணம் இருந்தனர்.
குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அதேபோன்று பாஜகவில் இருக்கும் காயத்ரி ரகுராம் சமூகவலைத்தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் நேற்று அமமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான மோகன் வைத்யா அக்கட்சியிலிருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இத்தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடிகர் ரஞ்சித், விக்னேஷ் ஆகியோர் அமமுகவில் உறுப்பினர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.