நீங்க தான் என் அம்மாவா? 22 வருஷம் எங்கம்மா போயிட்ட? கண்ணீர் வரவழைக்கும் பாசக்கதை
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெங்களூர்: கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு பகுதியில் மூடிகெரேவை சேர்ந்தவர் சித்ரா (வயது 65). தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 40 வருடங்களாக காபி எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய கணவர் காளிமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு மறைந்ததால், சித்ரா தற்போது தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் 22 வருடங்களுக்கு முன் தொலைந்து போன தன்னுடைய மகள் அஞ்சலியை தேடி வந்துள்ளார்.
காபி தோட்டங்களில் வேலை:
இவரைப் போன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வாழ்ந்து வரும் அஞ்சலி (வயது 32) தனது அம்மாவை, கணவர் சஜூவுடன் இணைந்து தேடி வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் மூடிகெரேவுக்கு வந்த அஞ்சலி சமூக ஆர்வலர் மோனு என்பவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “எனது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
மூடிகெரேவை சுற்றியுள்ள காபி தோட்டங்களில் வேலை செய்கின்றனர். 1999-ஆம் வருடம் பள்ளிக்குச் செல்வதற்கு பயந்து, மரக்கட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்றில் கேரளாவுக்கு சென்றுவிட்டேன். தற்போது என் அம்மா எங்கே என தேடி வருகிறேன்” என்று கூறி தனது முகவரியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
நேரில் சந்தித்து விசாரித்தல்:
இந்த நிலையில், தோட்டத் தொழிலாளி சித்ராவும் மகளை தேடிக் கொண்டிருப்பதை அறிந்த மோனு, அவரை நேரில் சந்தித்து விசாரித்துள்ளார். அப்போது அவரிடம் அஞ்சலி குறித்த அங்க அடையாளங்களை சித்ரா தெரிவித்துள்ளார்.
கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர்:
இதை வீடியோவாக எடுத்த சமூக ஆர்வலர் மோனு கோழிக்கோட்டில் உள்ள அஞ்சலிக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, இவர் தான் தனது தாய் என்று கூறி, கடந்த 4-ம் தேதி தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் மூடிகெரேவுக்கு வந்தார். சமூக ஆர்வலர் மோனு, அஞ்சலியை காபி தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தன்னுடைய அம்மாவைக் கண்டதும் அஞ்சலி ஓடிப் போய் கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அதன்பிறகு அவரை கண்டுபிடிக்க உதவிய தனது கணவர் சஜூ மற்றும் தனது பிள்ளைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அஞ்சலி கூறும்போது, “22 வருடங்களுக்கு பின்பு என் அம்மாவை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை வருடங்கள் அம்மா இல்லாமல் அநாதையாக வாழ்ந்து வந்தேன். இப்போது என் அம்மா கிடைத்துவிட்டதால் நன்றாக பார்த்துக் கொண்டு அவருடன் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
