‘இடியட்ஸ்…!’- ‘குடிமக்களை’ வகைதொகை இல்லாமல் திட்டித் தீர்த்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ; என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பெரும் அதிர்வலைகளை எழுப்பி வருகிறது. மீண்டும் பல நாடுகளில் ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளதால் அந்நாட்டு அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.
கனடாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர், சில நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக தனி விமானம் மூலம் மெக்சிக்கோ பறந்துள்ளனர். கனடாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் சூழலில் இந்தப் பிரபலங்கள் தனி விமானத்தில் எந்தவித கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் குடித்து விட்டு ஜாலியாக சென்றுள்ளனர்.
தங்களின் இந்த இன்ப சுற்றுலா குறித்தான வீடியோக்களையும் புகைப்படங்களையும் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது கனடாவில் வைரலானது. குறிப்பாக நெட்டிசன்கள் பலர், ‘இப்படி பொறுப்பில்லாமல் கொரோனா பரவும் நேரத்தில் சுற்றுலா தேவை தானா?’ என்று வறுத்தெடுத்து உள்ளனர்.
இது பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘விமான வீடியோவைப் பார்த்த பல கனடா நாட்டுக் குடிமக்களைப் போல நானும் மிகுந்த எரிச்சலடைந்தேன். கிறிஸ்துமஸ் நேரத்தில் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒவ்வொருவரும் எப்படி பாடுபட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
இப்படியான சூழலில் சிலர் கொஞ்சம் கூட விழிப்புணர் இல்லாமல், மிகவும் அலட்சியத்துடன் தங்களையும், தங்கள் உடன் இருப்பவர்களையும், விமான ஊழியர்களையும் இப்படி ஆபத்தில் தள்ளி இருப்பது ஏற்க முடியாதது. அவர்கள் இடியட்ஸ்’ என்று வெந்து தீர்த்துள்ளார்.