நடிகையின் பாலியல் புகார்!.. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!.. ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகை சாந்தினி. மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், "மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்" என்று தெரிவித்து இருந்தார்.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, முன் ஜாமீன் அளிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார், தற்பொழுது எங்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது உள்ளிட்ட தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.

மற்ற செய்திகள்
