பிளாஸ்டிக் 'கவர்' ஒன்றில் போட்டுக்கொண்டு... தெருவில் பசி பட்டினியோடு கோடீஸ்வரர்...!சாலையோரத்தில் தஞ்சம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எழுதிக் கேட்டு அடித்து, உதைத்து மகன் துன்புறுத்துவதாகக் கூறி, பசி, பட்டினியோடு 80 வயது முதியவர் ஒருவர் சாலையோரத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை தனியார் அமைப்பு ஒன்று மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளது.

சேலத்தை அடுத்த ஆர்.கே. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராமசாமிக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்தார்.
ராமசாமியின் அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்துவதாகக் கூறும் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்நிலையம், மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் புகாரளித்தும், அவர்கள் சமரசம் பேசி அனுப்பிவிடுவதாகக் கூறுகிறார் முதியவர். இதனால் நொந்துபோன ராமசாமி, சொத்து தொடர்பான ஆவணங்களை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு சாலையோரத்திலும் பேருந்து நிழற்குடைகளிலும் படுத்துறங்கி, பசி பட்டினியோடு சுற்றி வந்துள்ளார்.
இவரது நிலையைப் பார்த்த செய்தியாளர்கள் சிலர், உணவு வாங்கிக் கொடுத்து உதவி செய்ததோடு, தனியார் ஆதரவற்றோர் அமைப்பிடம் சேர்த்து விட்டனர். முதியவர் ராமசாமியின் நிலையை கருத்தில் மாவட்ட நிர்வாகம் அவருக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
