காலேஜ் லீவுல 'ஜாலியா' இருக்கணும்! நண்பனின் 'கண்ணெதிரே' பறிபோன நால்வரின் உயிர்... கதறித்துடித்த பெற்றோர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உதவிக்கு யாரும் வராததால் மாணவர்கள் நால்வரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரனேஷ்(20), யஸ்வந்த்(20), கதிரேசன்(20), ரகுராம்(20), சுரேஷ்ராஜ்(20) என்ற 5 கல்லூரி மாணவர்களும் விடுமுறையையொட்டி நேற்று சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணைக்கு 3 பைக்குகளில் சென்றுள்ளனர். அணை மற்றும் அதையொட்டிய பகுதியில் சுற்றிப்பார்த்த நண்பர்கள் நண்பகல் 12 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சித்தன்குட்டைக்கு வந்தார்கள்.
கரையில் அமர்ந்து ரசித்தவர்களுக்கு நீர்த்தேக்கத்தில் குளிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதையடுத்து அனைவரும் இறங்கி குளிக்க சென்றனர். ஆனால் சுரேஷ்ராஜ் மட்டும் தான் வரவில்லை என்று கூறி கரையிலேயே அமர்ந்து கொண்டார். குளிக்க சென்றவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் நால்வரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினர்.
இதைப்பார்த்த சுரேஷ்ராஜ் காப்பாற்றுங்கள் என்று கூறி கத்தியிருக்கிறார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் உதவிக்கு யாரும் வரவில்லை. இதையடுத்து சுரேஷ்ராஜ் உடனே பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சித்தன்குட்டைக்கு விரைந்து வந்தார்கள்.
அங்கு உதவிக்கு சில வாலிபர்களை வைத்துக்கொண்டு மாணவர்களை தேடினர். மாலை 3.30 மணியளவில் நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் உடல்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் கதறித்துடித்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.