121 வருஷத்துல சென்னை - புதுவை இடையே கரையை கடந்த புயல்கள் இவ்வளவா?.. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 121 ஆண்டுகளில் சென்னை மற்றும் புதுவை இடையே 12 புயல்கள் கரையை கடந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் சுமார் 135 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர்,"மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு - சனிக்கிழமை காலைக்கு இடைப்பட்ட நேரத்தில், மாமல்லபுரத்துக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். தற்போது சென்னை எஸ் பேண்ட் ரேடார் (S Band Rador) அடிப்படையில் பார்க்கின்றபோது, இந்தப் புயலின் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 முதல் 80 கி.மீட்டராக இருக்கிறது" என்றார்.
சென்னை - புதுவை இடையே கடந்த 121 ஆண்டுகளில் 12 புயல்கள் கரையை கடந்திருப்பதாகவும் இந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தால் இது 13 வது புயலாக இருக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
மாண்டஸ் புயல் கரையை கடப்பதை முன்னிட்டு தேசிய பேரிடர் மேலாண்மை படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விரைந்திருக்கின்றன. புயல் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளதாகவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடப்பதை உறுதி செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது எனவும், மழை நேரத்தில் வெட்ட வெளிகளில் நின்று செல்பி எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. அதேபோல, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்கள் முன்னரே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.