இங்கிலாந்து டூர்... மும்பையில் தங்கியிருந்த இளம் வீரரை கழற்றிவிட்ட இந்திய அணி!.. ஆசை காட்டி மோசம் செய்ததா பிசிசிஐ?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து தொடருக்காக பிசிசிஐ-யின் மும்பை குவாரண்டைனில் இருந்த இளம் வீரர் கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவும் ஜூன் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டது.
மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடைபெறும் மிகப்பெரிய தொடராக இருப்பதால் 25 பேர் கொண்ட இந்திய அணி தயார் செய்யப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஆனால் ஐ.பி.எல் தொடரின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சஹா மூன்று மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான போட்டிகளில் எவ்வளவு ஃபிட்டாக இருப்பார் என்று கூற முடியாது என்கிற அடிப்படையில் மூன்றாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ் பரத்தை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக பிசிசிஐ இணைத்தது.
இதன் காரணமாக ஜூன் 19ஆம் தேதி முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணியுடன் கே.எஸ் பரத்தும் மும்பையில் உள்ள ஹோட்டலில் குவாரண்டைன் இருந்தார். அதனால் நிச்சயம் ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்லும் அணியுடன் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி அவரை நிராகரித்துவிட்டு இங்கிலாந்து பயணித்தது.
இது குறித்து வெளியான செய்தியில் சஹா தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதால் அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக கூறிவிட்டதால் பரத் அணியில் இணைக்கப்படவில்லை என்றும், அதனால் அவர் இங்கிலாந்து பயணிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மும்பை வரை வந்து, குவாரண்டைனில் இருந்த பின்னர், திரும்பவும் இவரை வீட்டுக்கு அனுப்பியது மிகவும் பரிதாபதுக்குரிய நிலை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.