‘என் அப்பா இறந்தபோது ரவி சார் ஒரு அட்வைஸ் சொன்னாரு’!.. இந்திய அணியின் இளம் நம்பிக்கை முகமது சிராஜ் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது தந்தை இறந்த சமயத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய அறிவுரை குறித்து முகமது சிராஜ் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை கைப்பற்றினார். ஆனாலும் 4 ஓவரை வீசிய அவர் 53 ரன்கள் விட்டுகொடுத்தார். இதனை அடுத்து விளையாடிய போட்டிகளிலும் அதிகமான ரன்களை வாரி வழங்கியதால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்ட முகமது சிராஜ், இந்திய அணியில் இருந்தும் சற்று புறக்கணிப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் முகமது சிராஜ், அந்த அணிக்காகவும் ஆரம்ப காலத்தில் அவர் சரியாக பந்துவீசவில்லை. ஆனாலும் கேப்டன் விராட் கோலி அவர் மீது நம்பிக்கை வைத்து அதிகமான வாய்ப்புகளை கொடுத்தார். அதேபோல் முகமது சிராஜும் படிப்படியாக தனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமான முகமது சிராஜ், அந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களுக்கு சிறப்பான பந்துவீச்சின் மூலம் சரியான பதிலடி கொடுத்தார். அந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிக சிறப்பாக பந்துவீசினார்.
இந்தநிலையில், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து ABP ஊடகத்துக்கு முகமது சிராஜ் பேட்டியளித்துள்ளார். அதில், ‘எனது பந்துவீச்சில் அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். இதற்காக நான் அதிகம் கஷ்டப்பட்டேன். 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டதற்கு பிறகு நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அதன் பிறகே எனது பந்துவீச்சில் அதிகமான முன்னேற்றங்களை ஏற்படுத்தினேன்.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரும் பலம். என்னை எப்படி கையாளுவது என்பது அவருக்கு நன்றாக தெரியும். பல இக்கட்டான நேரங்களில் விராட் கோலி மட்டுமே என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். இந்திய அணியில் எனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டு, நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதுதான் முகமது சிராஜின் தந்தை காலமானார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ஆறுதல் அளித்தது குறித்து சிராஜ் பகிர்ந்துள்ளார். அதில், ‘ஆஸ்திரேலிய தொடரின்போது எனது தந்தையை நான் இழந்தேன். அப்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அந்த சமயம் என்னிடம் பேசிய ரவி சாஸ்திரி, நீ டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறாய். இந்த போட்டியில் உன் அப்பாவின் ஆசீர்வாதத்துடன் 5 விக்கெட்டுகள் எடுப்பாய் என வாழ்த்தினார்’ என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
