'கூரைய பிச்சுட்டு கொட்ட வேண்டிய துட்டு!.. அநியாயமா கைநழுவி போகுதே'!.. ஐபிஎல்-ஐ தொடர்ந்து அடுத்த ஆப்பு!.. கைவிரித்த பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை டி20 தொடர் குறித்து ராஜீவ் சுக்லா வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் என்று மே 29 அன்று நடந்த எஸ்ஜிஎம் மீட்டிங்கில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேசமயம், உலகக் கோப்பை டி20 தொடர் குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டே நடைபெறவேண்டிய டி20 தொடர், கொரோனா காரணமாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, மீண்டும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை போட்டுத் தாக்க, அமீரகத்தில் தொடரை நடத்தலாம் என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகின.
அதுவும், இந்தியா - இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, அமீரகத்தில் செப்டம்பர் மாதம் உலகக் கோப்பையை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தது. எஸ்ஜிஎம் மீட்டிங்கிற்கு பிறகு உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதாவது, இப்போது இந்தியாவில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் சில நாட்கள் கழித்து, இதுகுறித்து முடிவு செய்யலாம் என மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா தனது அறிக்கையில், டி20 உலகக் கோப்பை நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அமீரகம் சென்றிருக்கிறார். மீதமுள்ள போட்டிகளை எந்தவித சிக்கலுமின்றி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவர் அமீரகம் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கலீஜ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இங்குள்ள கிரிக்கெட் வாரியம் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஐபிஎல் குறித்து கலந்துரையாடுவோம். அதன்படி அட்டவணை உருவாக்கப்படும். குறிப்பாக, கடந்த ஆண்டு இங்கு ஐபிஎல் நடந்ததைப் போல இம்முறையும் எந்த பிரச்சனையும் இன்று நடத்த வழிவகை செய்யப்படும் என்றார்.
அதுமட்டுமின்றி, உலகக் கோப்பை டி20 குறித்து தீவிரமாக விவாதித்தோம். எங்கள் முதல் தேர்வு இந்தியா தான். எனவே, இதுகுறித்து ஒரு மாதம் கழித்து முடிவெடுக்க உள்ளோம். இதற்கான கால அவகாசம் ஐசிசி-யிடம் கோரப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள், இந்தியாவில் நிலைமை மேம்படாவிட்டால், அங்கு உலகக் கோப்பை நடத்தப்படாது. அமீரகத்தில் தான் நடக்கும். ஒருவேளை இந்தியாவில் நிலைமை மாறினால், நிச்சயம் தொடரை அங்கு தான் நடத்துவோம் என்று கூறியிருக்கிறார்.

மற்ற செய்திகள்
