‘அந்த பவுலர்தான் நமக்கு சவாலா இருக்க போறார்’!.. ‘இதை மட்டும் சரியா பண்ணிட்டா நாம ஜெயிச்சிறலாம்’.. அஸ்வின் கணிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது குறித்து தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் தற்போது மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை இங்கிலாந்து செல்ல உள்ளனர்.
இதனை அடுத்து ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முன்னதாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. அந்த தொடரில் கேப்டன் விராட் கோலி மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் தற்போது நடைபெற தொடரில் இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இங்கிலாந்து அணி அவர்களது சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். தங்களுடைய நாட்டு கண்டிசனில் தாங்கள் சிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துவார்கள். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவலாக இருப்பார். தற்போது இந்திய அணிக்கு கிடைத்த அனுபவத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். விராட் கோலியுடன் இணைந்து மற்ற வீரர்களும் ரன்களை குவித்துவிட்டால், தொடரை வென்று விடலாம்.
நான் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீசியுள்ளேன். வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான சிறப்பாக பந்து வீசியுள்ளேன். சிறந்த வீரர்களுக்கு எதிரான பந்து வீசுவது மகிழ்ச்சியான சவலாக இருக்கும். முதல் பேட்ஸ்மேன் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரை பந்துவீச தயாராகி வருகிறேன்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 409 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.