‘சார் அங்க கொஞ்சம் பாருங்க’!.. பிராக்டீஸ் மேட்ச் முடிஞ்சதும் ‘தனியாக’ சென்ற இளம்வீரர்.. ரவி சாஸ்திரியிடம் சொன்ன ரிஷப் பந்த்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம்வீரர் ஷர்துல் தாகூர் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ரிஷப் பந்த் பேசிய உரையாடல் இணைத்தில் கவனம் பெற்று வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, வரும் ஜூன் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 3-ம் தேதி இங்கிலாந்து சென்றது.
இந்த தொடரில் சுப்மன் கில், ஷர்துல் தாகூர், வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷர்துல் தாகூரின் ஆட்டத்தை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது இந்திய அணியிக்கு இளம் ஆல்ரவுண்டரை பிசிசிஐ தேடி வருகிறது. அதற்கு காரணம், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் அதிகமாக பவுலிங் வீசவில்லை. பேட்டிங், பீல்டிங்கில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் கூட ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் விதமாக, இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். இதில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தவுடன், வீரர்கள் அனைவரும் தங்கள் ஓய்வு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஷர்துல் தாகூர் மட்டும் தனது கிட் பேக்கை எடுத்துக் கொண்டு தனியாக வலைப்பயிற்சிக்கு சென்றுவிட்டார்.
இதனை கவனித்த ரிஷப் பண்ட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைப் பார்த்து மெதுவாக சார் என அழைத்துள்ளார். உடனே, என்ன ஆச்சு? என ரவி சாஸ்திரி கேள்வி எழுப்ப, ஷர்துல் தாகூரை நோக்கி ரிஷப் பந்த் கை காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரவி சாஸ்திரி, ஓ.. அவர் வலைபயிற்சிக்கு போய்விட்டாரா என கூறியுள்ளார். இந்திய அணியில் தனது இருப்பை உறுதி செய்ய, ஷர்துல் தாகூர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.