‘அரசல் புரசலாக வந்த செய்தி’.. இப்போ ‘பிசிசிஐ’ செயலாளரே சொல்லிட்டாரு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பயிற்சியாளர் யார் என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது. இது முக்கியமான தொடர் என்பதால் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்றுள்ளார்.
இதனிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் வரும் ஜூலை 13-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சென்றுள்ளனர். அதனால் இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம்வீரர்களை கொண்ட அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து தொடருக்காக சென்றுள்ளதால், வேறொரு பயிற்சியாளர் இலங்கை தொடருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைமை ஆலோசகராக ராகுல் டிராவிட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.