"அந்த தவறுக்காக காத்திருந்தேன்..." "நினைத்தது போலவே நடந்தது..." 'ஹிட்மேன் ரோஹித்' சொல்லும் 'சிக்ஸர் ரகசியம்'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Jan 30, 2020 06:53 AM

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் பந்து வீச்சாளர்களின் தவறுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டதாலேயே 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற முடிந்தது என ஹிட்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்

I used the mistakes of bowlers so that I could succeed-rohit

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய வீரர் ஷமி வீசிய பந்துகள் நியூசிலாந்து வீரர்களை நிலைகுலைய வைத்தது. இதனால் ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் வில்லியம்ஸன் மற்றும் கப்தில் களமிறங்கினர். சூப்பர் ஓவரில் அந்த அணி 17 ரன்கள் எடுத்தது. போட்டியை வெல்ல இந்திய அணிக்கு 18 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளுக்கு 8 ரன்கள் மட்டுமே எடுக்க, இறுதி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட ரோஹித், கடைசி இரு பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க, இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதுபெற்ற ரோஹித் ஷர்மா பேசுகையில், “சூப்பர் ஓவரில் இதற்கு முன்பு விளையாடியது கிடையாது. நான் ஆடச் செல்லும்போது எந்த பிளானும் இல்லை. ஆனால், பந்துவீச்சாளர் தவறு செய்யும்போது, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என காத்திருந்தேன். பிட்ச் மிகவும் அற்புதமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை என்பதால், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பினேன் எனக் குறிப்பிட்டார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி பேசுகையில், “ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன். ஆனால், முக்கியமான கட்டத்தில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஷமி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.  சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி எங்களுக்கு நெருக்கடிகொடுத்தது. ஆனால், ரோஹித் அற்புதமாகச் செயல்பட்டார். ரோஹித் ஒரு ஹிட் அடித்தால், கண்டிப்பாக பந்துவீச்சாளருக்கு நெருக்கடி ஏற்படும். ஒட்டுமொத்தமாக இன்றைய நாள் ஒரு அற்புதமான நாளாகும் எனக் குறிப்பிட்டார்.

Tags : #ROHITH SHARMA #CRICKET #VIRAT KOHLI #MOHAMMAD SHAMI #NEW ZEALAND VS INDIA