‘முக்கியமான நேரத்துல மூத்த வீரர் பண்ண அந்த தப்பு’!.. எங்கே கோட்டைவிட்டது சிஎஸ்கே?.. தோல்விக்கு தோனி சொன்ன முக்கிய காரணம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்க்கு மூத்த வீரர் ஒருவர் காரணம் என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 27-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் (4 ரன்கள்) அவுட்டாகினார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த மொயின் அலி மற்றும் டு பிளசிஸ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் மளமளவென ஸ்கோர் உயரத் தொடங்கியது. இதில் 58 ரன்கள் அடித்திருந்தபோது பும்ரா ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து மொயின் அலி அவுட்டாகினார். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இது அவருக்கு 200-வது ஐபிஎல் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் பொல்லார்டு வீசிய ஓவரில் க்ருணல் பாண்ட்யாவிடன் கேட்ச் கொடுத்து ரெய்னா 2 ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்த பந்திலேயே டு பிளசிஸும் (50 ரன்கள்) அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் மெல்ல மும்பை அணியும் பக்கம் ஆட்டம் சாயத் தொடங்கியது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த அம்பட்டி ராயுடு மற்றும் ஜடேஜா கூட்டணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் அம்பட்டி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடுத்து மிரள வைத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை சென்னை அணி குவித்தது.
இதனை அடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி மும்பை அணி விளையாடியது. இதில் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா (35 ரன்கள்) மற்றும் டி காக் (38 ரன்கள்) ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர். அப்போது ஷர்துல் தாகூர் வீசிய ஓவரில் ரோஹித் ஷர்மா அவுட்டாக, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் ஜடேஜா ஓவரில் 3 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மொயின் அலி ஓவரில் டி காக்கும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.
இந்த இக்கட்டான சமயத்தில் ஜோடி சேர்ந்த பொல்லார்டு மற்றும் க்ருணல் பாண்ட்யா கூட்டணி சிஎஸ்கேவின் பந்துவீச்சை சிதறடித்தது. அதில் பொல்லார்டு, தொடர்ந்து சிக்சர் மழையாக பொழிந்தார். இதனால் சிங்கிள் மட்டுமே தட்டி பொல்லார்டு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை க்ருணால் பாண்ட்யா செய்யத் தொடங்கினார். அப்போது 17 பந்துகளில் தனது தனது அரைசதத்தைக் கடந்து சென்னை அணியை அதிர வைத்தார்.
இதனால் இவரை அவுட்டாக்க வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் தோனி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தார். ஆனாலும் பொல்லார்டின் சிக்சர் மழை ஓயவில்லை. இந்த சமயத்தில் பொல்லார்டின் கேட்சை ஒன்றை டு பிளசிஸ் தவறவிட்டது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் அடித்து மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் பொல்லார்டு 34 பந்துகளில் 87 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்து அசத்தினார்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன், ‘மைதானம் அதிகமாக ரன்கள் எடுக்க ஏதுவாக இருந்தது. துல்லியமாக பந்துவீசினால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அந்த அளவிற்கு மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. அதிகமான இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். சில போட்டிகள் எதிர்பாராத தோல்வியை கொடுக்கும். அதில் இப்போட்டியும் ஒன்று’ என அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘பொல்லார்டு 17 பந்துகளில் அரைசதம் அடித்து நெருக்கடியை ஏற்படுத்தினார். 18- வது ஓவரில் பொல்லார்டு கொடுத்த கேட்சை டு பிளசிஸ் தவறவிட்டார். நிச்சயம் எங்களது தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். அதேபோல் 7 ஓவர்களுக்கு 105 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்டு சிறப்பாக விளையாடினார். தோல்வி அடைந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில்தான் இருக்கிறோம். அதனால் அதிகமாக வருத்தம் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்’ என தோனி தெரிவித்துள்ளார்.