"ரிஷப் பண்ட் உயிரை காப்பாத்திய 2 ஊழியர்கள் இவங்க தான்".. VVS லக்ஷ்மன் பகிர்ந்த புகைப்படம்.. நெகிழ்ச்சி பின்னணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்தின் போது பண்ட்டை காப்பாற்றிய இரு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் VVS லக்ஷ்மன்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில் முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான T20 போட்டிகளுக்கான மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தாண்டுக்கு முன்னதாக தனது தாயை ஆச்சரியப்படுத்த ரிஷப் பந்த் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான VVS லக்ஷ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அதில்,"எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து ரிஷப் பண்ட்டை அழைத்துச் சென்று பெட்ஷீட்டால் போர்த்தி ஆம்புலன்சை அழைத்த ஹரியானா ரோட்வேஸ் டிரைவர் சுஷில் குமாருக்கு நன்றி. உங்கள் தன்னலமற்ற சேவைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம், சுஷில் ஜி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, அவருக்கு உதவி செய்த பேருந்து நடத்துனர் பரம்ஜித் என்பவருக்கும் லக்ஷ்மன் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து லக்ஷ்மன்," பேருந்து நடத்துனர் பரம்ஜித், டிரைவர் சுஷீலுடன் இணைந்து ரிஷப்பிற்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய மனதுடன் செயல்பட்ட இந்த தன்னலமற்ற தோழர்களுக்கு மிகவும் நன்றி. உதவிய அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள லக்ஷ்மன் இருவரையும் ரியல் ஹீரோ என குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், ரசிகர்கள் இந்த இரு ஊழியர்களையும் பாராட்டி வருகின்றனர்.
Gratitude to #SushilKumar ,a Haryana Roadways driver who took #RishabhPant away from the burning car, wrapped him with a bedsheet and called the ambulance.
We are very indebted to you for your selfless service, Sushil ji 🙏 #RealHero pic.twitter.com/1TBjjuwh8d
— VVS Laxman (@VVSLaxman281) December 30, 2022