"தம்பி பெரிய கிரிக்கெட் பிளேயரா வரணும்".. சகோதரனுக்காக அண்ணன் செஞ்ச தியாகம்.. ஐபிஎல் ஏலத்தில் பட்டையை கிளப்பிய பின்னணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சமீபத்தில் நடந்து முடிந்தது.
முன்னதாக, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அதே போல, சில இளம் வீரர்கள் கூட அதிக அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சிறந்த தொகைக்கும் ஏலம் போயிருந்தனர். அந்த வகையில், காஷ்மீர் பகுதியை சேர்ந்த விவ்ராந்த் ஷர்மா என்ற இளம் வீரரும், தனது அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாயில் ஆரம்பித்து, 2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருந்தார். கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் அவரை எடுக்க போட்டி போட்டிருந்த நிலையில், கடைசியில் ஹைதராபாத் அணி அவரை எடுத்திருந்தது.
அப்படி ஒரு சூழலில், விவ்ராந்த் சர்மா இந்த இடத்திற்கு வருவதற்காக அவரது அண்ணன் செய்த விஷயம், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. ரஞ்சி தொடர் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் ஆடி கவனம் ஈர்த்த விவ்ராந்த் சர்மா, தற்போது ஐபிஎல் தொடரிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு காரணமாக, விவ்ராந்த்தின் அண்ணன் இருப்பது தான் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
விவ்ராந்த்தின் சகோதரரான விக்ராந்த் ஷர்மா, சிறு வயது முதல் கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என விரும்பி அதற்காக தயாராகி வந்துள்ளார். அப்படி இருக்கையில், கடந்த ஒரு சில ஆண்டுகள் முன்பு விக்ராந்த்தின் தந்தை தவறி போக, குடும்ப பொறுப்பை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அவரிடம் வந்துள்ளது. மறுபக்கம், விக்ராந்த்தை போல, விவ்ராந்த்தும் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார்.
குடும்ப சூழல் காரணமாக, விக்ராந்த் கிரிக்கெட் உள்ளிட்ட கனவுகளை மாற்றி வைக்க, தனது தம்பியான விவ்ராந்த்தை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார். இதற்காக தம்பிக்கு முழு ஆதரவாக இருந்து கிரிக்கெட் கனவை எட்டிப் பிடிக்க விக்ராந்த் ஷர்மா உதவி செய்தார். அதன்படி, தற்போது ஐபிஎல் தொடரிலும் சிறந்த தொகைக்கு ஏலம் போய் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளார் விவ்ராந்த் சர்மா.
இதுகுறித்து பேசும் விவ்ராந்த், தனது சகோதரன் தியாகத்தால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றும் இல்லை என்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என்றும் உருக்கத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயம் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக ஆடி, சகோதரரின் தியாகத்திற்கு அர்த்தம் சேர்ப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.