"பாவம்யா 'கோலி'!.. 'அந்த' ஒரு விஷயத்துக்காக எவ்ளோ 'ஃபீல்' பண்ணி இருப்பாரு தெரியுமா?".. விடாது தொடரும் 'சர்ச்சை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் உலகில் கடந்த சில நாட்களாக மிகப் பெரும் பேசுப் பொருளாகியுள்ளது, கோலி மற்றும் பிசிசிஐ விவகாரம் தான்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி (Virat Kohli), இந்தாண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடருக்குப் பிறகு, டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி மோதவுள்ள நிலையில், இதில் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
டி 20 போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, மற்ற இரு வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தலைமை தாங்குவதில் அதிக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ அறிவித்தது. டி 20 போட்டியின் கேப்டனாக கோலியை தொடர வேண்டும் என கேட்டிருந்தோம் என்றும், ஆனால் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
ஆனால், கங்குலியின் கருத்தை மறுத்த கோலி, தான் டி 20 போட்டியின் கேப்டனாக தொடர பிசிசிஐ கேட்டுக் கொள்ளவில்லை என்றும், ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது கூட, கடைசி நேரத்தில் தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். இரு தரப்பினரும், இரு வேறு கருத்துக்களைத் தெரிவித்ததால், இந்த சமாச்சாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திய அணிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு, கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த குழப்பத்திற்கு, மிக வேகமாக செயல்பட்டு, இரு தரப்பினரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கீர்த்தி ஆசாத் (Kirti Azad) கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நானும் தேர்வாளராக இருந்திருக்கிறேன். பொதுவாக, ஒரு அணி தேர்வு செய்யப்பட்டால், அந்த அணி குறித்த விவரத்தினை தேர்வாளர்கள், பிசிசிஐ தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த அணி விவரங்களை சரி பார்த்து, அதற்கு சம்மதம் தெரிவித்து பிசிசிஐ தலைவர் கையெழுத்திட்டு அதனை வெளியிடுவார். அதே போன்று, எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டன் பதவியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டுமென்றாலும், இதே நடைமுறை தான் செயல்படுத்தப்படும். அப்படி பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கோலி விவகாரம் சென்றிருந்தால், இது பற்றி கோலியிடம் முன்னதாகவே பேசியிருக்க வேண்டும். ஆனால், முறைப்படி அப்படி எதுவும் நிகழவில்லை என்றே தோன்றுகிறது.
கோலி ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் பெரிதும் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால், அவரிடம் அந்த விஷயம் போய் சேர்ந்த விதம் தான், நிச்சயம் அவரை மனதளவில் பாதித்திருக்கும் என நான் உணர்கிறேன். நமது அணியின் தேர்வாளர்கள் சிறந்தவர்கள் தான். ஆனால், ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் ஆடிய கிரிக்கெட் போட்டிகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால், கோலி ஆடிய ஆட்டத்தின் பாதி கூட அவை இருக்காது' என கீர்த்தி ஆசாத், பிசிசிஐ-யை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.