"இதான் உங்க 'கடைசி' சான்ஸ்!!.. வேற வழியே இல்ல சொல்லிட்டேன்!.." எச்சரித்த 'முன்னாள்' வீரர்.. இக்கட்டான நிலையில் 'கோலி'?!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகள் ஆடவுள்ளது.
முதலாவதாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இரு அணிகளுக்கு இடையே வரும் 26 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி மோதவுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த போது, ஒரு நாள் தொடரின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதுவரை, கேப்டனாக இருந்த கோலியை அந்த பதவியில் இருந்து நீக்கியது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் சலசலப்பை உண்டு பண்ணியது.
இது தொடர்பாக, பிசிசிஐ மற்றும் கோலி தரப்பில் பல தரப்பட்ட கருத்துக்கள் எழுந்து அதிக விமர்சனங்களை உண்டு பண்ணியது. டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, தனது கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய நிலையில், ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இன்னும் இது பற்றியான விமர்சன அலை ஓயாத நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காத கோலி, முன்பு போல பேட்டிங்கிலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா (Danish Kaneria), கோலியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'விராட் கோலியைப் பொறுத்தவரையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், தென்னாப்பிரிக்க மண்ணில், இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதில்லை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், தற்போது தென்னாப்பிரிக்க தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு கேப்டனாக டெஸ்ட் தொடரை வெல்ல இது தான் கோலிக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என நான் கருதுகிறேன். இந்த டெஸ்ட் தொடரில், அவர் சிறப்பாக பேட்டிங் செய்து தனது அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக, பிசிசிஐ தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளதால், தன்னை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்' என கனேரியா தெரிவித்துள்ளார்.