'திடீர்ன்னு நான் கேப்டன் இல்லன்னு சொல்லிட்டாங்க... முன் அறிவிப்பே இல்லை'- கோலி ப்ரஸ் மீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபுது கேப்டன், கோலி விடுப்பு எனப் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
வீடியோ வழி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய விராட் கோலி, “பல உண்மைக்கு மாறான செய்திகள் உலா வருகின்றன. நான் சொன்னது போல் அவை அனைத்தும் உண்மை இல்லை. சில புரளிகளுக்கு நான் பல வருடங்களாக விளக்கம் கொடுத்து வருகிறேன். பிசிசிஐ-யிடம் நான் ஓய்வு வேண்டும் எனக் கேட்கவில்லை. அப்படி வந்த செய்தி பொய்யானது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது எனக்கு திடீரென்று அறிவிக்கப்பட்டது தான். ஒரு ஒன்றரை மணி நேரம் முன்பு என்னை அழைத்துச் சொன்னார்கள். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நான் இருக்கிறேன். அதற்காக சிறப்பாகத் தயாராகி உள்ளேன். இந்திய அணிக்காக விளையாடுவதில் இருந்து எதுவும் என்னைத் தடுக்காது. இதுவரையில் கேப்டன் ஆக பொறுப்புடனும் நேர்மை உடனும் செயல்பட்டு இருக்கிறேன்.
பேட்டிங் பொறுத்த வரையில் சர்வதேச அளவில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் ஒருவருக்கு நிச்சயம் எப்படி திறனை வெளிக்காட்ட வேண்டும் என்பது தெரியும். ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் ஆக நான் தொடரவே விரும்பினேன். ஆனால், தேர்வாளர்கள் அது போல் நினைக்கவில்லை. ரோகித் ஒரு சிறந்த கேப்டன் தான். இனி வரும் காலங்களில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எனது அணிக்கு சிறந்த உறுதுணை ஆக இருப்பேன். அணியை முன் நோக்கி நகர்த்துவது எனது கடமை ஆக இருக்கும்.
கடந்த 2-3 ஆண்டுகளாகவே எனக்கும் ரோகித்துக்கும் இடையேயான உறவு குறித்து விளக்கங்கள் கொடுத்து வருகிறேன். எனக்கு ரோகித்துக்கும் இடையே எந்தப் பிரச்னையுமே இல்லை. இந்த விளக்கங்களைக் கொடுத்து கொடுத்து எனக்கு சோர்வாகிவிட்டது. நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது தான். ஐசிசி தொடரை வெல்லவில்லை. தேர்வாளர்களின் முடிவில் உள்ள லாஜிக் எனக்குப் புரிகிறது” எனப் பேசியுள்ளார்.