என்ன தான் நடக்குது இந்திய அணியில்..? ‘இந்த பிரச்சனை முடியனும்னா கங்குலி இதை பண்ணியே ஆகணும்’.. சுனில் கவாஸ்கர் தடாலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டன்சி விவகாரம் குறித்து கங்குலி வெளிப்படையான விளக்கத்தை கொடுக்க வேண்டுமென முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் திடீரென ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். பிசிசிஐயின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முன்னதாக பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, டி20 உலகக்கோப்பை முன்பே டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் வலியுறுத்தியதாக கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய விராட் கோலி தென் ஆப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே தான் ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து தன்னிடம் கூறியதாகவும், டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும்போது யாரும் விலக வேண்டாம் என கூறவில்லை என்றும் விராட் கோலி கூறினார். இந்த விவகாரத்தில் இருவரின் கருத்தும் முரணாக உள்ளதால், தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த விவகாரத்தில் பிசிசிஐயை எந்த விதத்திலும் சர்ச்சைக்குள் கொண்டு வர விரும்பவில்லை. ஆனாலும் கங்குலி என்ற தனிநபர் விராட் கோலியிடம் எப்போது பதவி விலக வேண்டாம் என கூறினார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். பிசிசிஐ தலைவராக இதை விளக்க வேண்டிய கடமை கங்குலிக்கு உள்ளது.
எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசி இருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. மூத்த அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை கொடுத்தால்தான் சில விஷயங்களுக்கு முடிவுக்கு வரும். அப்படி இல்லையென்றால் ஒரு அறிக்கை வெளியிட்டாவது இந்த பிரச்சினைக்கு முடிவு கொண்டுவர வேண்டும்’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.